ஜல்லிக்கட்டு-51 பேர் காயம்

மதுரை: ஜன. 16: மதுரை அவனியாபுரம் ஜல்லிகட்டு போட்டி விறுவிறுப்பாக நடந்து முடிந்தது. 17 காளைகளை அடக்கி முதலிடம் பிடித்த அவனியாபுரத்தைச் சேர்ந்த மாடுபிடி வீரர் கார்த்திக் என்பவருக்கு 10 லட்சம் மதிப்பிலான கார் மற்றும் கறவை பசு பரிசாக வழங்கப்பட்டது. அதேபோல், சிறந்த காளைக்கும் கார் மற்றும் கறவை பரிசாக வழங்கப்பட்டன. இந்தப்போட்டியில் 2 காவலர்கள் உள்பட 51 பேர் காயமடைந்தனர்.
817 காளைகள் அவிழ்ப்பு: பொங்கல் பண்டிகையை முன்னிட்டு மதுரை மாவட்டம் அவனியாபுரத்தில் இன்று காலை 7 மணிக்கு மாடுபிடி வீரர்கள் உறுதிமொழி ஏற்புக்கு பின் அமைச்சர்கள் பி.மூர்த்தி, பிடிஆர் பழனிவேல் தியாகராஜன், மாவட்ட ஆட்சியர் சங்கீதா, மாநகராட்சி ஆணையாளர் மதுபாலன் ஆகியோர் போட்டியினை கொடியசைத்து தொடங்கிவைத்தனர். இதனையடுத்து இந்த போட்டியில் கலந்துகொள்வதற்காக ஆன்லைன் மூலமாக தேர்வு செய்யப்பட்ட 435 மாடுபிடி வீரர்களும் 10 சுற்றுகளாக அனுமதிக்கப்பட்டதோடு 817 காளைகளும் அவிழ்க்கப்பட்டன.
களத்தில் மிரட்டிய காளைகள்: 9 சுற்றுகளிலும் இருந்து குறைந்தது 5 காளைகளை அடக்கிய சிறந்த மாடுபிடி வீரர்கள் தேர்வு செய்யப்பட்டு இறுதி சுற்றில் கலந்துகொண்டனர். விதவிதமான பெயர்களில் அவிழ்க்கப்பட்ட காளைகள் வீரர்களுக்கு சவால் விடுக்கும் வகையில் களத்தில் நின்று விளையாடி வீரர்களை மிரட்டி வெற்றிபெற்று பரிசுகளை அள்ளி சென்றன.இதேபோன்று களத்தில் மிரட்டிய காளைகளை மாடுபிடி வீரர்களும் சீறிப்பாய்ந்து அடக்கி பல்வேறு பரிசுகளை பெற்றுச்சென்றனர். போட்டியின் போது காளைகளையும், மாடுபிடி வீரர்களையும் கைதட்டியும் ஆரவாரம் செய்தும் மக்கள் உற்சாகபடுத்தினர்.