ஜாபர் சாதிக் வீட்டுக்கு ‘சீல்’ வைப்பு

சென்னை: மார்ச் 1: போதைப் பொருள் கடத்தல் வழக்கில் சிக்கிய திமுக முன்னாள் நிர்வாகி ஜாபர் சாதிக் வீட்டுக்குள் பூட்டை உடைத்து நுழைந்த டெல்லி போதைப் பொருள் தடுப்பு பிரிவு போலீஸார், அங்கிருந்த ஆவணங்களை அள்ளிச் சென்றனர். மேலும், வீட்டுக்கு சீல் வைக்கப்பட்டது.
இதுகுறித்து போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது: போதைப் பொருள் தயாரிக்க பயன்படுத்தப்படும் முக்கிய வேதிப் பொருட்களை (சூடோபெட்ரின்), தேங்காய் பவுடர் மற்றும் ஹெல்த் மிக்ஸ் (சத்து மாவு) பாக்கெட்களில் மறைத்து வைத்து, நியூசிலாந்து, ஆஸ்திரேலியா உள்ளிட்ட நாடுகளுக்கு கடத்தப்படுவதாக டெல்லியில் உள்ள மத்திய போதைப் பொருள் தடுப்பு பிரிவு போலீஸாருக்கு தகவல் கிடைத்தது. இதுதொடர்பாக, டெல்லி போதைப் பொருள் தடுப்பு பிரிவு போலீஸார் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டனர்.
இந்நிலையில், கடத்தல் கும்பல், மேற்கு டெல்லி கைலாஷ் பார்க் பகுதியில் உள்ள கிடங்கில் பதுங்கியிருந்தது தெரியவந்தது. கடந்த 15-ம் தேதி அங்கு நுழைந்த போலீஸார், அங்கிருந்த சென்னை முகேஷ், முஜிபுர், விழுப்புரம் அசோக்குமார் ஆகிய 3 பேரை கைது செய்தனர். அவர்களிடம் இருந்து போதைப் பொருட்கள் தயாரிக்க பயன்படும் 50 கிலோ வேதிப் பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டன. இவற்றின் சர்வதேச மதிப்பு ரூ.2,000 கோடி.
கடத்தலுக்கு மூளையாக செயல்பட்டது தமிழ் சினிமா திரைப்படத் தயாரிப்பாளரும், திமுக சென்னை மேற்கு மாவட்டஅயலக அணி துணை அமைப்பாளருமான ஜாபர் சாதிக் என்று குற்றம்சாட்டப்பட்டது. இதையடுத்து, திமுகவில் இருந்து அவர் நிரந்தமாக நீக்கப்பட்டார்.இந்நிலையில், போதைப் பொருள் கடத்தல் வழக்கு தொடர்பாக, தங்கள் அலுவலகத்தில் பிப்ரவரி 26-ம் தேதி நேரில் ஆஜராகுமாறு டெல்லி போதைப் பொருள் தடுப்பு பிரிவு போலீஸார், கடந்த 23-ம் தேதி ஜாபர் சாதிக் வீட்டில் சம்மன் (அழைப்பாணை) ஒட்டினர். ஆனால் அவர் ஆஜராகவில்லை.இதையடுத்து, அவரையும், அவரதுகூட்டாளிகளையும் பிடிக்கதனிப்படை அமைக்கப்பட்டது. அவர்களை தனிப்படை போலீஸார் தீவிரமாக தேடி வருகின்றனர்.ஜாபர் சாதிக் பின்னணி: குற்றச்சாட்டுக்கு உள்ளான ஜாபர் சாதிக்கின் பூர்வீகம் ராமநாதபுரம் மாவட்டம் கமுதி. பல ஆண்டுகளுக்கு முன்பு பிழைப்புக்காக சென்னை வந்தவர், சொந்தமாக தங்கும் விடுதி, ஓட்டல், ஏற்றுமதி நிறுவனம், உணவு பதப்படுத்தும் நிறுவனம் என குறுகிய காலத்தில் உச்சம் தொட்டார். அப்போதுதான் அவருக்கு சர்வதேச போதைப் பொருள் கடத்தல் கும்பலுடன் நெருக்கம் ஏற்பட்டுள்ளது.