ஜாமீன் நீட்டிப்பு கோரி டெல்லி கேஜ்ரிவால் உச்ச நீதிமன்றத்தில் மனு

புதுடெல்லி: மே 27 டெல்லி முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவாலுக்கு உச்ச நீதிமன்றம்.வழங்கிய இடைக்கால ஜாமீன் ஜூன் 1 ஆம் தேதியுடன் முடிவடையவுள்ள நிலையில் அவர் ஜாமீன் நீட்டிப்பு கோரி மனுத் தாக்கல் செய்துள்ளார். முன்னதாக, தேர்தல் பிரச்சாரம் மேற்கொள்ள அனுமதிக்கும் வகையில் அவருக்கு வரும் ஜூன் 1-ம் தேதி வரையில் ஜாமீன் வழங்கப்பட்டுள்ளது. இந்நிலையில் அவர் ஜாமீன் நீட்டிப்பு கோரி மனு தாக்கல் செய்துள்ளார்.
மதுபான கொள்கை ஊழல் வழக்கில் கைது செய்யப்பட்ட டெல்லி முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவால், திஹார் சிறையில் அடைக்கப்பட்டார். அவரது ஜாமீன் மனு மீது உச்ச நீதிமன்றத்தில் விசாரணை நடைபெற்றது. நீதிபதிகள் சஞ்சீவ் கன்னா, திபாங்கர் தத்தா அமர்வு இந்த மனுவை விசாரித்தது. தேர்தலை முன்னிட்டு அர்விந்த் கேஜ்ரிவாலுக்கு இடைக்கால ஜாமீன் வழங்கி உத்தரவிட்டது.
அதன்பின்னர் முதல்வர் கேஜ்ரிவால் தீவிர தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டு வந்தார். கடந்த 25 ஆம் தேதி டெல்லியில் ஒரே கட்டமாக மக்களவை தேர்தல் நடைபெற்றது. மொத்தம் உள்ள 7 தொகுதிகளில் இண்டியா கூட்டணி சார்பில் ஆம் ஆத்மி 4 மற்றும் காங்கிரஸ் கட்சி 3 தொகுதிகளிலும் போட்டியிட்டன. தேர்தலில் கேஜ்ரிவால் தனது மனைவி, மகன், மகள் மற்றும் தந்தையுடன் வந்து வாக்களித்தார்.இந்நிலையில் மருத்துவக் காரணங்களுக்காக மேலும் 7 நாட்களுக்கு ஜாமீனை நீட்டிக்கும்படி கேஜ்ரிவால் கோரியுள்ளார்.