ஜார்கண்ட் முதல்வரை காணவில்லை என்று பிஜேபி புகார்

டெல்லி: ஜன. 30 ஜார்கண்ட் முதல்வர் ஹேமந்த் சோரன் திடீரென மாயமாகி உள்ளதாக பாஜகவினர் குற்றம்சாட்டி உள்ளனர். இதற்கிடையே தான் சட்டவிரோத பணப்பரிமாற்ற வழக்கில் ஹேமந்த் சோரனின் டெல்லி இல்லத்தில் இருந்து அமலாக்கத்துறை அதிகாரிகள் அவரது பிஎம்டபிள்யூ காரை ஓட்டிச்சென்ற சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. ஜார்கண்ட் மாநிலத்தில் ஜார்கண்ட் முக்தி மோர்ச்சா மற்றும் காங்கிரஸ் கட்சியின் கூட்டணி ஆட்சி நடக்கிறது. முதல்வராக ஜார்கண்ட் முக்தி மோர்ச்சா கட்சியின் தலைவர் ஹேமந்த் சோரன் உள்ளார். இந்நிலையில் தான் ஹேமந்த் சோரன் தற்போது சிக்கலில் சிக்கி உள்ளார். நிலமோசடி தொடர்பாக சட்டவிரோத பணப்பரிவர்த்தனையில் ஈடுபட்டுள்ளதாக அவருக்கு எதிராக குற்றச்சாட்டுகள் எழுந்தன. இதுதொடர்பாக அமலாக்கத்துறை விசாரணை நடத்தி வருகிறது. கடந்த 20ம் தேதி ஹேமந்த் சோரனிடம் அமலாக்கத்துறை அதிகாரிகள் விசாரணை நடத்தினர். மேலும் இன்னும் விசாரணை முடியவில்லை. இதையடுத்து மீண்டும் அவர் விசாரணைக்கு அழைக்கப்படுவார் என அமலாக்கத்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டது. இந்நிலையில் தான் அமலாக்கத்துறை அவரை விசாரணைக்கு ஆஜராகக்கோரி சமீபத்தில் சம்மன் அனுப்பியது. அதற்கு அவர் ஜனவரி 31ம் தேதி மதியம் 1 மணியளவில் ஜார்கண்ட் மாநிலம் ராஞ்சியில் உள்ள தனது வீட்டில் விசாரணை நடத்தி கொள்ளலாம் எனக்கூறி அமலாக்கத்துறைக்கு கடிதம் எழுதினார். ஆனால் இதனை அமலாக்கத்துறை ஏற்கவில்லை என கூறப்படுகிறது. இதற்கிடையே தான் கடந்த 27 ம் தேதி ஹேமந்த் சோரன் ராஞ்சியில் இருந்து டெல்லி புறப்பட்டு சென்றனர். தனிப்பட்ட காரணங்களுக்காக அவர் டெல்லி புறப்பட்டு சென்றதாகவும், விரைவில் அவர் ராஞ்சி திரும்புவதாகவும் தகவல் தெரிவிக்கப்பட்டன. இருப்பினும் அவர் எங்கு சென்றார் என்பது பற்றிய தகவல் இல்லை. இதையடுத்து 18 மணிநேரமாக ஹேமந்த் சோரன் மாயமாகவிட்டதாக பாஜகவினர் தெரிவித்தனர்.