ஜி 20 அமைப்பிற்கு இந்தியா தலைமை தாங்குவது இந்தியர்களுக்கு பெருமை

புதுடெல்லி, நவ. 9-ஜி 20 அமைப்புக்கு வரும் டிசம்பர் மாதம் இந்தியா தலைமை பதவியை ஏற்க உள்ளது. இதற்கான சின்னம், மையக்கருத்து மற்றும் இணைய தளத்தை பிரதமர் நரேந்திடிர மோடி நேற்று அறிமுகம் செய்தார். ஒரே பூமி ஒரே குடும்பம், ஒரே எதிர்காலம் என்ற அடிப்படையில் மையக்கருத்து உருவாக்கப்பட்டு உள்ளது. அப்போது பிரதமர் மோடி பேசியதாவது: ஜி 20 சின்னம் உலக நல்லிணக்கத்தை எதிரொலிக்கிறது.
டிசம்பர் மாதம் ஜி 20 அமைப்பிற்கு இந்தியா தலைமை ஏற்கிறது. ஜி 20 அமைப்பிற்கு இந்தியா தலைமை பதவி ஏற்கும் இந்த வரலாற்று சிறப்புமிக்க தருணத்தில் நாட்டு மக்களுக்கு வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்கிறேன். ஜி 20 அமைப்பின் சின்னம் சாதாரணமானது அல்ல. அது அனைவரின் உணர்வு. தற்போது ஜி20 அமைப்பை இந்தியா தலைமையேற்று நடத்துகிறது. 75-வது தின சுதந்திர தின கொண்டாட்டத்தின் போது, இந்தியா தலைமைப் பதவியை ஏற்றுள்ளது. நாடு சுதந்திரம் பெற்ற பிறகு வளர்ச்சியை நோக்கி நமது பயணத்தைத் துவக்கினோம். கடந்த 75 ஆண்டுகளில் அனைத்து அரசுகளின் முயற்சியும் அடங்கும். அனைத்து அரசுகள், குடிமகன்கள், நாட்டின் வளர்ச்சியை நோக்கி முன்னெடுத்துச் சென்றனர். சின்னமும், மையக்கருத்தும், நமது பாரம்பரியத்தை உணர்த்துகிறது. உலக அளவில் ஏற்பட்ட பிரச்சினையில் தலைமை பதவி இந்தியாவிடம் வந்துள்ளது. ஜி 20 அமைப்பில் இடம்பெற்றுள்ள நாடுகள்தான், உலகளவில் 85 சதவீத ஜிடிபிக்கு பங்களிப்பை அளிக்கிறது. இயற்கையும் வளர்ச்சியும் ஒன்றாக பயணிக்க முடியும். வளர்ச்சியில் அனைவரையும் இந்தியா முன்னெடுத்து செல்கிறது. உலகத்தின் 75 சதவீத வர்த்தகத்தை ஜி20 அமைப்பு முடிவு செய்கிறது. நமது பாரம்பரியத்தை உலகிற்கு அறிமுகப்படுத்துவதே நோக்கம் என தெரிவித்தார்.