ஜி.20 மாநாடு நாளை துவக்கம்

புதுடெல்லி செப்டம்பர் 8- உலக நாடுகள் தங்களுக்குள் ஒருங்கிணைந்து செயல்படுவதற்காக பிரிக்ஸ், சார்க், ஆசியான் போன்று பல்வேறு அமைப்புகளை உருவாக்கி இருக்கின்றன. அந்த வகையில் சர்வதேச அளவில் சக்தி வாய்ந்த அமைப்பாக ஜி-20 நாடுகள் அமைப்பு திகழ்கிறது. அந்த அமைப்பில் இந்தியா, அமெரிக்கா, ரஷியா, சீனா, இங்கிலாந்து உள்பட மிக முக்கியமான 20 நாடுகள் அங்கம் வகிக்கின்றன. ஜி-20 அமைப்பு சார்பில் ஒவ்வொரு ஆண்டும் ஏதாவது ஒரு நாட்டில் உச்சி மாநாடு நடத்துவது வழக்கத்தில் உள்ளது. அந்த வகையில் இந்த ஆண்டு ஜி-20 உச்சி மாநாட்டை இந்தியா தலைமையேற்று நடத்துகிறது. ஒவ்வொரு மாநாட்டின் போதும் ஏதாவது ஒரு முழக்கம் வெளியிடப்படுவது வழக்கம்.
அதன்படி “ஒரே பூமி, ஒரே குடும்பம், ஒரே எதிர்காலம்” என்பது டெல்லி ஜி-20 உச்சி மாநாட்டின் முழக்கமாக உள்ளது. டெல்லி ஜி-20 உச்சி மாநாட்டுக்காக மத்திய அரசு மிக பிரமாண்டமான ஏற்பாடுகளை செய்துள்ளது. டெல்லி மாநகரம் சொர்க்க லோகம் போல அலங்கரிக்கப்பட்டு மாற்றப்பட்டு இருக்கிறது. ஜி-20 நாடுகளின் பிரதிநிதிகள் பங்கேற்ற கூட்டங்கள் நாடு முழுவதும் கடந்த 9 மாதங்களாக நடைபெற்றன. சென்னை உள்பட 60 நகரங்களில் 200 கூட்டங்கள் நடத்தப்பட்டது. அந்த கூட்டங்களில் ஜி-20 நாடுகள் இடையே பல்வேறு முக்கிய முடிவுகள் எடுக்கப்பட்டு உள்ளன. உலக அளவில் முக்கியத்துவம் வாய்ந்ததாக அந்த முடிவுகள் கருதப்படுகின்றன.
அவற்றுக்கு இறுதி வடிவம் கொடுத்து நடைமுறைப்படுத்துவதற்காக டெல்லி ஜி-20 மாநாட்டின் தலைவர்கள் பங்கேற்பு கூட்டம் நாளை (சனிக்கிழமை) டெல்லியில் தொடங்குகிறது. சனி, ஞாயிறு 2 நாட்கள் ஜி-20 உச்சி மாநாடு விவாதங்கள் நடைபெறும். டெல்லி பிரகதி மைதானத்தில் புதிதாக கட்டப்பட்டுள்ள பாரத் மண்டபத்தில் ஜி-20 மாநாட்டு கூட்டங்கள் நடைபெற உள்ளன. இதில் ஜி-20 நாட்டு தலைவர்கள் பங்கேற்று பேசுவார்கள். மாநாட்டில் கலந்து கொள்வதற்காக உலக தலைவர்கள் கடந்த 5-ந்தேதி முதல் டெல்லி வர தொடங்கி விட்டனர். பெரும்பாலானவர்கள் நேற்று வந்து சேர்ந்து விட்டனர். இன்று அமெரிக்க அதிபர் ஜோபைடன், இங்கிலாந்து பிரதமர் ரிஷிசுனக், பிரான்ஸ் அதிபர் இம்மானு வேல் மேக்ரான், வங்காளதேச பிரதமர் ஹசீனா, சவுதி இளவரசர் மற்றும் தலைவர்கள் டெல்லி வருகிறார்கள்.
டெல்லி வரும் வெளிநாட்டு தலைவர்களை வரவேற்க மத்திய மந்திரிகள் பணியில் அமர்த்தப்பட்டு உள்ளனர். அவர்கள் பாரம்பரிய உடை அணிந்து வெளிநாட்டு தலைவர்களை வரவேற்கிறார்கள். அதன் பிறகு வெளிநாட்டு தலைவர்கள் டெல்லியில் உள்ள பல்வேறு நட்சத்திர ஓட்டல்களில் தங்குவதற்காக அழைத்து செல்லப்படுகிறார்கள். மாநாட்டில் ரஷிய அதிபர் புதின் பங்கேற்கவில்லை. அவர் வீடியோ மூலம் பேசுவார் என்று முதலில் கூறப்பட்டது. ஆனால் வீடியோ மூலமாகவும் மாநாட்டில் பங்கேற்க மாட்டார் என்று இன்று காலை தகவல்கள் வெளியானது. அதுபோல சீன அதிபர் ஜின்பிங் ஜி-20 மாநாட்டில் பங்கேற்காமல் புறக்கணித்து உள்ளார். அவருக்கு பதில் சீன பிரதமர் மாநாட்டில் கலந்து கொள்வதற்காக டெல்லி வருகிறார். ஜி-20 அமைப்பில் இடம்பெற்று உள்ள நாட்டுகளின் தலைவர்களை தவிர சிறப்பு அழைப்பாளர்களாக சில நாட்டு தலைவர்களை அழைக்கும் அதிகாரம் மாநாட்டை நடத்தும் நாட்டுக்கு வழங்கப்பட்டுள்ளது. அந்த வகையில் ஸ்பெயின் உள்பட 9 நாட்டு தலைவர்களுக்கு சிறப்பு அழைப்பாளர்களாக பங்கேற்குமாறு அழைப்பு விடுக்கப்பட்டு இருந்தது. இது தவிர ஐ.நா. சபை, உலக வங்கி, உலக சுகாதார நிறுவனம், உலக வர்த்தக அமைப்பு உள்பட உலகின் முக்கியத்துவம் வாய்ந்த அமைப்புகளுக்கும் அழைப்பு விடுக்கப்பட்டு இருந்தது. அதை ஏற்று நூற்றுக்கணக்கான தலைவர்கள், பிரதிநிதிகள் டெல்லியில் வந்து குவிந்துள்ளனர். இந்த நிலையில் ஸ்பெயின் ஜனாதிபதி பெட்ரோ சான் செஸ்சுக்கு கொரோனா தொற்று ஏற்பட்டு இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. இதையடுத்து அவரது டெல்லி வருகை கடைசி நிமிடத்தில் ரத்து செய்யப்பட்டது. உலக தலைவர்கள் அனைவரும் ஒரே இடத்தில் குவிவதால் டெல்லியில் உச்சக்கட்ட பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டு உள்ளன. டெல்லி முழுவதும் முக்கிய இடங்களில் அதிரடிப்படை வீரர்கள் நிறுத்தப்பட்டுள்ளனர். பாதுகாப்பு கருதி மக்கள் நடமாட்டம் மற்றும் வாகன போக்குவரத்துக்கு கடும் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. வெளிமாநிலங்களில் இருந்து டெல்லிக்குள் செல்லும் வாகன போக்குவரத்து முழுமையாக தணிக்கை செய்யப்படுகிறது. டெல்லியில் மருந்து சேவை போன்ற அத்தியாவசிய சேவை தவிர மற்ற அனைத்து போக்குவரத்துகளுக்கும் தடை விதிக்கப்பட்டுள்ளது. வெளிநாட்டு தலைவர்கள் எளிதாக வந்து செல்வதற்காக இந்த ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. 2 நாட்கள் நடக்கும் ஜி-20 மாநாட்டில் பல்வேறு முக்கிய பிரச்சினைகள் குறித்து விவாதிக்கப்பட உள்ளன. குறிப்பாக பருவ நிலை மாற்ற பிரச்சனையை சமாளிக்க எரிசக்தி துறையை எவ்வாறு வலுப்படுத்துவது என்பது ஜி-20 மாநாட்டில் முக்கிய விவாத பொருளாக இருக்கும் என்று அறிவிக்கப்பட்டு உள்ளது. எதிர்காலத்தில் எரிசக்தி மாற்றம் ஒவ்வொரு நாட்டுக்கும் பொருளாதார வளர்ச்சியில் முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது. எனவேதான் ஜி-20 மாநாட்டில் இதுபற்றி அதிகம் விவாதிக்கப்பட உள்ளது. மாநாட்டுக்கு ஒரே உலகம் முழக்கம் வைக்கப்பட்டு இருப்பதால் பருவ நிலை மாற்றங்கள் தொடர்பாக ஏற்படும் சவால்களை எதிர்கொள்ள முன்னணி நாடுகள் ஒருங்கிணைந்து செயல்படுவதற்கான முக்கிய முடிவுகள் நாளை, நாளை மறுநாள் கூட்டங்களில் எடுக்கப்பட உள்ளது. குறைந்த நிதி ஆதாரத்தில் நாடுகள் எவ்வாறு ஒருங்கிணைந்து பருவநிலை சவாலை எதிர்கொள்வது என்பது பற்றியும் தீர்மானிக்கப்பட உள்ளது. மேலும் கொரோனா தாக்கம் உலகை குலுக்கிய பிறகு இந்தியா தலைமையில் நடக்கும் முக்கிய சர்வதேச மாநாடாக இது அமைந்துள்ளது. எனவே எதிர்காலத்தில் கொரோனா போன்று ஏதேனும் பேரிடர் ஏற்பட்டால் அவற்றை ஒன்றுபட்டு எதிர்க்க ஒருங்கிணைந்த சுகாதார திட்டத்தை உருவாக்கவும் ஜி-20 மாநாட்டில் முக்கியமாக விவாதிக்கப்பட உள்ளது. சுகாதார அவசர கால தடுப்பு நடவடிக்கைகள் பற்றியும் முக்கிய தீர்மானங்கள் கொண்டு வரப்பட உள்ளன. இதுபோன்று மேலும் பல்வேறு துறைகளில் முக்கிய முடிவுகள் எட்டப்பட உள்ளன.
ஜி20 உச்சி மாநாடு டெல்லியில் நாளை மற்றும் நாளைமறுதினம் நடைபெற இருக்கிறது. இதில் கலந்து கொள்வதற்காக பல்வேறு நாட்டு தலைவர்கள் இந்தியா வந்த வண்ணம் உள்ளனர். இதனால் டெல்லி விழாக்கோலம் பூண்டுள்ளது. தலைவர்கள் தங்கும் ஓட்டல்கள், தெருக்கள், சாலைகள் ஜொலிக்கின்றன. ஜி20 மாநாட்டில் தலைவர்கள் உரையாற்றுவார்கள். பிரதமர் மோடியும் உரையாற்றுவார். ஜி20 மாநாட்டிற்கிடையே இருநாடு தொடர்பான பேச்சுவார்த்தையிலும் பிரதமர் மோடி ஈடுபடுவார். அந்த வகையில் 18 நாட்டு தலைவர்களுடன் பிரதமர் மோடி, இருநாடு தொடர்பான பேச்சுவார்த்தை நடத்துவார் எனத் தகவல் வெளியாகியுள்ளது. இன்று அமெரிக்க அதிபர், வங்காளதேச பிரதமர், மொரீசியஸ் தலைவர் ஆகியோருடன் பேச்சுவார்த்தை நடத்துகிறார். நாளை இங்கிலாந்து, ஜப்பான், ஜெர்மனி, இத்தாலி தலைவர்களுடன் இருநாட்டு பேச்சுவார்த்தையில் ஈடுபடுகிறார். ஜி20 மாநாட்டில் உலகம் எதிர்கொள்ளும் பல்வேறு பிரச்சனைகள் குறித்து விவாதிக்கப்பட இருக்கிறது.