ஜூன் 6 வரை துறை வாரியானகூட்டங்கள் நடத்த கர்நாடகா அரசுக்கு தடை

பெங்களூரு, மே 28:
2024-ம் ஆண்டு பொது மக்களவைத் தேர்தல் வாக்கு எண்ணிக்கை நடைபெறும் வரையும், சட்டமேலவைத் தேர்தல், வாக்கு எண்ணிக்கை முடியும் வரையிலும், மாவட்டத் தேர்தல் நடத்தும் அலுவலர்கள் மற்றும் பிற துறை அதிகாரிகளுடன் கூட்டங்கள் மற்றும் வீடியோ உரையாடல்களை நடத்தக் கூடாது என்று மாநில தலைமைத் தேர்தல் அதிகாரி மனோஜ் குமார் மீனா, அரசு தலைமைச் செயலாளருக்கு கடிதம் எழுதியுள்ளார்.
மக்களவைத் தேர்தல் வாக்கு எண்ணிக்கை ஜூன் 4ம் தேதி நடக்கிறது. மேலும் சட்டமேலவைத் தேர்தல் அறிவிக்கப்படுவதையொட்டி, கணக்கெடுப்பு மற்றும் தேர்தல் பணிகளுக்கான ஆயத்த பணிகள் நடைபெற்று வருகின்றன. ஜூன் 6-ம் தேதி வரை தேர்தல் நடத்தை விதிகள் அமலில் இருக்கும் என்றார்.
இந்த நிலையில், சில துறைகளில் துணை தலைமைச் செயலாளர்கள், முதன்மைச் செயலாளர்கள், செயலாளர்கள் மற்றும் துறைத் தலைவர்கள் பல்வேறு பிரச்னைகள் தொடர்பாக தங்கள் துறை அதிகாரிகளுடன் சந்திப்பு மற்றும் வீடியோ கான்பரன்ஸிங்கிற்கு ஏற்பாடு செய்து வருகின்றனர். இதனால் மக்களவைத் தேர்தல் மற்றும் கர்நாடக சட்ட மேலவை தேர்தல், வாக்கு எண்ணிக்கையில் தொய்வு ஏற்பட்டுள்ளது.
எனவே, மக்களவைத் தேர்தல் வாக்கு எண்ணிக்கை மற்றும் சட்டமேலவைத் தேர்தல் பணிகள் முடியும் வரை அவசரக் கூட்டம், வீடியோ உரையாடல் தேவைப்பட்டால், அனைத்துத் துறைகளும் தேர்தல் ஆணைய அலுவலகத்துடன் கலந்தாலோசித்து, மாவட்டத் தேர்தல் அலுவலர்கள் மற்றும் பிற துறையினருடனான சந்திப்பு மற்றும் வீடியோ உரையாடலை ஒத்திவைக்கத் தேவையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது.