ஜூன் 6 வரை விண்ணப்பிக்கலாம்

சென்னை: மே 7: இளநிலை பொறியியல் படிப்புகளில் சேர விரும்புவோர் ஜூன் 6-ம் தேதி வரை விண்ணப்பிக்கலாம் என்று தொழில்நுட்பக் கல்வி இயக்குநரகம் அறிவித்துள்ளது.
தமிழகத்தில் அண்ணா பல்கலைக்கழகத்தின் கீழ் 460-க்கும் மேற்பட்ட பொறியியல் கல்லூரிகள் உள்ளன. இவற்றில் இளநிலை படிப்புகளில் சுமார் 1.50 லட்சம் இடங்கள் வரை உள்ளன.
இவற்றை நிரப்புவதற்கான சேர்க்கை கலந்தாய்வு 2018-ம் ஆண்டு முதல் இணையதளம் வழியாக நடத்தப்படுகிறது. இந்த கலந்தாய்வை தொழில்நுட்பக் கல்வி இயக்குநரகம் நடத்தி வருகிறது. அதன்படி இந்த ஆண்டுக்கான கலந்தாய்வு அறிவிப்பை தொழில்நுட்பக் கல்வித் துறை ஆணையர் கொ.வீரராக ராவ் நேற்று வெளியிட்டார். அதன் விவரம் வருமாறு:
பொறியியல் கலந்தாய்வுக்கான இணைய விண்ணப்ப பதிவு நேற்று தொடங்கியது.
மாணவர்கள் www.tneaonline.org எனும் இணையதளம் வாயிலாக ஜூன் 6-ம் தேதி வரை விண்ணப்பிக்கலாம். இணையதள வசதி இல்லாதவர்கள் மாநிலம் முழுவதும் உள்ள 110 பாலிடெக்னிக் கல்லூரிகளில் அமைக்கப்பட்டு உள்ள சிறப்பு சேவை மையங்கள் வழியாக விண்ணப்பங்களை சமர்ப்பிக்கலாம். மேலும், மாணவர்கள் தாங்கள் படித்த பள்ளிகள் மூலமாக விண்ணப்பிக்கவும் வசதிகள் செய்யப்பட்டுள்ளன.
விண்ணப்ப கட்டணமாக பொது பிரிவினருக்கு ரூ.500, எஸ்சி, எஸ்டி, பிரிவினருக்கு ரூ.250 நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.
அசல் சான்றிழ்களை பதிவேற்றம் செய்வதற்கான அவகாசம் ஜூன் 12-ம் தேதியுடன் நிறைவுபெறும்.
மாணவர்களின் சமவாய்ப்பு எண் ஜூன் 12-ம் தேதி வெளியாகும். சான்றிதழ் சரிபார்ப்பு பணி ஜூன் 13 முதல் 30-ம் தேதி வரை நடைபெறும்.
இதையடுத்து, தரவரிசை பட்டியல் ஜூலை 10-ல் வெளியிடப்படும். அதில் தவறு இருந்தால் புகார் தெரிவிக்கலாம். இந்த புகார்கள் ஜூலை 11 முதல் 20-ம் தேதி வரை சேவை மையங்கள் மூலம் சரிசெய்யப்படும்.
பின்னர், கலந்தாய்வு நடைபெறும் தேதிகள் அகில இந்திய தொழில்நுட்பக் கல்வி குழுமத்தின் (ஏஐசிடிஇ) கல்வி ஆண்டு அட்டவணைக்கு ஏற்ப அறிவிக்கப்படும்.