ஜூலை மாதம் சைவ உணவின் விலை 28% அதிகரிப்பு

புதுடெல்லி, ஆகஸ்ட் 8- கடந்த ஜூலை மாதத்தில் சைவ உணவின் விலை சுமார் 28 சதவீதம் அதிகரித்துள்ளது. இதனை கிரிஸில் சந்தை ஆய்வு நிறுவனம் தெரிவித்துள்ளது. இதே கால கட்டத்தில் அசைவ உணவின் விலை சுமார் 11 சதவீதம் என்ற அளவுக்கு உயர்ந்து உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இது முந்தைய மாதத்துடனான ஒப்பீடு எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. காய்கறிகளின் விலை உயர்வு இதற்குக் காரணம் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக தக்காளியின் விலை மும்மடங்கு அதிகரித்ததும், மிளகாய் (விலையில் 69% உயர்வு), வெங்காயம் (விலையில் 16% உயர்வு) மற்றும் சீரக விலையில் ஏற்பட்ட உயர்வும் இதற்குக் காரணம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. உணவின் விலை தொடர்ச்சியாக மூன்றாவது மாதமாக உயர்ந்துள்ளது. இதற்கு முக்கியக் காரணம் தக்காளி விலை உயர்வு என CRISIL தனது அறிக்கையில் தெரிவித்துள்ளது. நாடு முழுவதும் நிலவும் விலையின் அடிப்படையில் வீடுகளில் உணவு தயாரிக்க ஆகும் செலவை இந்நிறுவனம் கணக்கிட்டு இதனை தெரிவித்துள்ளது. கறிக்கோழி (பிராய்லர்) மற்றும் தாவர எண்ணெய் விலை 2 சதவீதம் குறைந்த காரணத்தால் அசைவ சாப்பாட்டின் விலையில் ஏற்பட்ட விலை மாற்றம் குறைந்த வேகத்தில் இருந்ததாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.