ஜூலை 22 ஆம் தேதி மத்திய பட்ஜெட்?

புதுடெல்லி: ஜூன் 14:
நடப்பு நிதியாண்டுக்கான முழுமையான பட்ஜெட் ஜூலை 22ம் தேதி தாக்கல் செய்யப்பட உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. பிரதமர் மோடி தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி அரசு தொடர்ந்து மூன்றாவது முறையாக ஆட்சி அமைத்துள்ளது. இதையடுத்து, 18வது மக்களவையின் முதல் கூட்டத் தொடர், 24ல் தொடங்கி, ஜூலை 3ம் தேதி வரை நடைபெறுகிறது. இதைத் தொடர்ந்து, ஜூலை மூன்றாவது வாரத்தில் பட்ஜெட் கூட்டத் தொடர் நடக்கும் என, எதிர்பார்க்கப்படுகிறது.
இந்தக் கூட்டத்தொடரில் மக்களவைக்கு புதிதாக தேர்ந்தெடுக்கப்பட்ட உறுப்பினர்களின் பதவிப் பிரமாணம், மக்களவைத் தலைவர் தேர்வு, குடியரசுத் தலைவர் உரை மற்றும் அது குறித்த விவாதங்கள் நடைபெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. நாடாளுமன்ற கூட்டத்தொடர் குறித்தான அட்டவணையின்படி, இந்த அமர்வு காலவரையின்றி ஒத்திவைக்கப்படாது எனவும், 2024-2025 ஆம் நிதியாண்டுக்கான பட்ஜெட் தாக்கலுக்காக நாடாளுமன்ற அமர்வின் இரண்டாம் பகுதி மீண்டும் தொடங்கும் எனவும் தெரிகிறது. மத்திய பட்ஜெட் என்பது, ஒவ்வொரு ஆண்டும் பிப்ரவரி மாதம் தாக்கல் செய்யப்படுகிறது. இது ஏப்ரல் 1 முதல் மார்ச் 31 வரை வரவிருக்கும் நிதியாண்டிற்கான முழு நிதிநிலை அறிக்கையாக செயல்படுகிறது. ஆனால், நடப்பாண்டில் மக்களவைத் தேர்தல் நடைபெற்றதால், பிப்ரவரி 1ம் தேதி மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் இடைக்கால பட்ஜெட்டை தாக்கல் செய்தார். எனவே, புதிய அரசு அமைந்ததும் 2024-25ம் நிதியாண்டுக்கான முழு பட்ஜெட்டை தாக்கல் செய்ய வேண்டும்.அதன்படி; நடப்பு நிதியாண்டுக்கான முழுமையான பட்ஜெட் ஜூலை 22ம் தேதி தாக்கல் செய்யப்பட உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. தொடர்ந்து 7வது முறையாக நிதிநிலை அறிக்கையை நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்ய உள்ளார். பட்ஜெட் தயாரிப்பு பணிகள் துவங்கியுள்ளதால், நிதி அமைச்சகம், தனிமைப்படுத்தப்பட்டுள்ளது. பார்வையாளர்கள், வெளியாட்களுக்கு அனுமதி கிடையாது.