ஜெய்ப்பூரில் உற்சாக சாலைப் பேரணி

ஜெய்ப்பூர், ஜன. 26- குடியரசு தின விழாவில் பங்கேற்க இந்தியா வந்துள்ள பிரான்ஸ் அதிபர் இம்மானுவேல் மேக்ரானை ஜெய்ப்பூரில் டீக்கடைக்கு அழைத்துச் சென்ற பிரதமர் மோடி டீ வாங்கி கொடுத்து, அதற்கான பணத்தை யுபிஐ மூலம் செலுத்தினார்.
நாட்டின் 75வது குடியரசு தின விழா இன்று கொண்டாடப்பட உள்ளது. இதில் சிறப்பு விருந்தினராக கலந்து கொள்ள உள்ள பிரான்ஸ் அதிபர் இம்மானுவேல் மேக்ரான் 2 நாள் இந்திய சுற்றுப்பயணமாக நேற்று ராஜஸ்தான் மாநிலம் ஜெய்ப்பூர் வந்தடைந்தார். ஜெய்ப்பூர் விமான நிலையத்தில் அவரை வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கர், ராஜஸ்தான் ஆளுநர் கல்ராஜ் மிஸ்ரா, மாநில முதல்வர் பஜன்லால் சர்மா ஆகியோர் வரவேற்றனர். அங்கிருந்து உலக பாரம்பரிய தளமான ஆம்பர் கோட்டைக்கு சென்று மேக்ரான் சுற்றிப் பார்த்தார். பின்னர் மாலையில் பிரதமர் மோடி, மேக்ரானை சந்தித்தார். பின்னர் இரு தலைவர்களும் ஜந்தர் மந்தரில் இருந்து ஹவா மஹால் வரை திறந்த வாகனத்தில் சாலைப் பேரணி சென்றனர்.
அப்போது சாலையின் இருபுறமும் பொதுமக்கள் குவிந்து வரவேற்று கோஷமிட்டனர். ஹவா மஹாலை ரசித்த மோடி, மேக்ரான் அப்பகுதியில் கைவினைப் பொருட்கள் கடைக்கு சென்றனர். அங்கிருந்த ராமர் கோயில் மாதிரி கலைப் பொருளை மேக்ரானுக்கு மோடி பரிசாக வழங்கினார். இதற்கான தொகை ரூ.500ஐ யுபிஐ பரிவர்த்தனை மூலம் பிரதமர் மோடி செலுத்தினார். அங்கிருந்த டீக்கடையில் இரு தலைவர்களும் டீ குடித்தனர். அங்கும் ரூ.2ஐ பிரதமர் மோடி யுபிஐ மூலம் செலுத்தியதை மேக்ரான் வியப்புடன் பார்த்தார். அதைத் தொடர்ந்து ஓட்டல் தாஜ் ராம்பாக்கில் மோடி, மேக்ரான் பேச்சுவார்த்தை நடத்தினர். இதில் பாதுகாப்பு, வர்த்தகம், பருவநிலை மாற்றம், அணுசக்தி மற்றும் மாணவர், தொழில் வல்லுநர்கள் பரிமாற்றம் உள்ளிட்ட துறைகளில் ஒத்துழைப்பை மேலும் வலுப்படுத்துவது குறித்து விவாதித்தாக கூறப்படுகிறது. அதிபர் மேக்ரான் இந்த பயணத்தில் இந்தியாவிற்கு கடற்படைக்கான 26 ரபேல் எம் ரக போர் விமானங்கள் மற்றும் 3 ஸ்கார்பீன் நீர் மூழ்கி கப்பல்கள் வாங்குவதற்கான ஒப்பந்தங்கள் முடிவாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. பின்னர் டெல்லி புறப்படும் முன்பாக பிரதமர் மோடி, மேக்ரானுக்கு இரவு விருந்து அளித்தார்.