ஜெர்மனியில் தமிழ்நாடு சுற்றுலாத்துறை அரங்கு

பெர்லின், மார்ச் 9-
அதிக அளவில் வெளிநாட்டு சுற்றுலா பயணிகளை தமிழ்நாட்டிற்கு ஈர்ப்பதற்காக, வெளிநாட்டு சுற்றுலா ஏற்பாட்டாளர்கள் பங்கு பெறக்கூடிய இந்திய பயண சுற்றுலா சந்தைகள், வெளிநாடு பயண சுற்றுலா சந்தைகள் மற்றும் கண்காட்சிகளில் தமிழ்நாடு சுற்றுலாத்துறையின் அரங்கம் அமைக்கப்படுகிறது. அங்கு தமிழ்நாட்டின் சுற்றுலா சிறப்புகளை தெரிவிக்கும் புத்தகங்கள், குறும்படங்கள், சிறு கையேடுகள் ஆகியவை பயண ஏற்பாட்டாளர்கள், வெளிநாடுகளைச் சேர்ந்த சுற்றுலாத்துறையினர், பார்வையாளர்களுக்கு வழங்கப்படுகிறது. இந்த நிலையில் ஜெர்மனி நாட்டின் தலைநகரான பெர்லின் நகரில் நடைபெற்று வரும் சர்வதேச சுற்றுலா சந்தையில் அமைக்கப்பட்டு உள்ள தமிழ்நாடு சுற்றுலாத் துறையின் அரங்கை சுற்றுலாத்துறை அமைச்சர் ராமச்சந்திரன் நேற்று திறந்து வைத்தார். மேலும் தமிழ்நாட்டின் சுற்றுலாத் தலங்களின் சிறப்புகளை ஜெர்மன் மொழியில் விளக்கங்களுடன் தெரிவிக்கும் புகைப்படங்கள் அடங்கிய புத்தகத்தை அவர் வெளியிட்டார்.
இந்த நிகழ்வுகளில் சுற்றுலா, பண்பாடு மற்றும் அறநிலையங்கள் துறை அரசு முதன்மைச் செயலாளர் சந்திரமோகன், சுற்றுலாத்துறை இயக்குநர் மற்றும் சுற்றுலா வளர்ச்சிக் கழக மேலாண்மை இயக்குநர் சந்தீப் நந்தூரி பங்கேற்றனர்.