ஞானவாபி மசூதி அடித்தள சாவிதொடர்பான வழக்கு விசாரணை

லக்னோ: நவம்பர். 24 – வாரணாசி ஞானவாபி மசூதி தொடர்பான வழக்கு ஒன்று இன்று அங்குள்ள உள்ளூர் நீதிமன்றத்தில் விசாரணைக்கு வருகிறது.
உத்தர பிரதேச மாநிலத்தில் உள்ள வாரணாசி காசி விஸ்வநாதர் கோயில் அமைந்துள்ளது. அதற்கு அருகிலேயே ஞானவாபி மசூதி உள்ளது. அவுரங்கசீப் ஆட்சிக் காலத்தில் இந்த மசூதி கட்டப்பட்டதாகக் கூறப்படுகிறது.
அதேநேரம் ஒரு தரப்பினர் அங்கே முதலில் விஷேஷ்வர் கோயில் இருந்ததாகவும் அதை இடித்துவிட்டு அவுரங்கசீப் இந்த ஞானவாபி மசூதி கட்டியதாகக் கூறப்படுகிறது. இது தொடர்பாக நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டிருந்தது.
அதன் அடிப்பையில் ஞானவாபி மசூதியில் தொல்லியல் துறை ஆய்வு நடத்த உத்தரவிடப்பட்ட நிலையில், தொல்லியல் துறை ஆய்வும் திட்டமிட்டபடி நடைபெற்றது. தொல்லியல் துறை ஆய்வுக்குத் தடை விதிக்கக் கோரி தாக்கல் செய்யப்பட்ட மனுக்கள் தள்ளுபடி செய்யப்பட்டன. இந்த ஆய்வுக்கான காலக்கெடு கடந்த அக்டோபர் 6ஆம் தேதியுடன் நிறைவடைந்த நிலையில், அறிக்கையைத் தாக்கல் செய்ய தொல்லியல் துறை கால அவகாசம் கோரியிருந்தது. இதற்கிடையே ஞானவாபி வளாகத்தில் அமைந்துள்ள ‘வியாஸ் ஜி கா தெஹ்கானா’ என்ற தரைதளத்தை மாவட்ட ஆட்சியரிடம் ஒப்படைப்பது தொடர்பான வழக்கு இன்று அங்குள்ள உள்ளூர் நீதிமன்றத்தில் விசாரணைக்கு வருகிறது.
‘வியாஸ் ஜி கா தெஹ்கானாவில் இருக்கும் அங்குள்ள வரலாற்று முக்கியமான பொருட்களை முறையாகப் பராமரிக்கவில்லை என்றால் அவை சேதமடையக்கூடும் என்ற அச்சம் காரணமாக அதன் சாவியை மாவட்ட ஆட்சியரிடம் ஒப்படைக்க வேண்டும் என்று என்று இந்த வழக்கில் இந்து அமைப்பினர் தரப்பில் மதன் மோகன் யாதவ் நீதிபதியிடம் வேண்டுகோள் விடுத்தார். இந்த வழக்கு விசாரணை நடைபெற்று வந்த போது விஜய் சங்கர் ரஸ்தோகி என்பவர் தன்னையும் இந்த வழக்கில் மனுதாரராகச் சேர்த்துக் கொள்ளும்படி மனுத்தாக்கல் செய்திருந்தார். அதன்படி கடந்த நவ. 20ஆம் தேதி இவர் தனது வாதங்களை முன்வைத்தார். இந்தச் சூழலில் தான் இந்த வழக்கு இன்று மீண்டும் விசாரணைக்கு வருகிறது.