டாக்டர்களுக்கு சம்பள உயர்வு

லண்டன், செப்டம்பர். 4 இங்கிலாந்தில் உள்ள இளநிலை டாக்டர்கள் தங்களுக்கு 35 சதவீதம் சம்பள உயர்வு வழங்க வேண்டும் என அரசாங்கத்திடம் பேச்சுவார்த்தை நடத்தினர். அதில் உடன்பாடு எட்டப்படாததால் அவர்கள் கடந்த பல மாதங்களாக போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.இதே கோரிக்கையை வலியுறுத்தி ரெயில்வே, விமான போக்குவரத்து உள்பட பல்வேறு துறையினர் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
ஆனால் போராட்டத்தில் ஈடுபடும்போது பேச்சுவார்த்தை நடத்துவதில்லை என்ற கொள்கையில் அரசாங்கம் உறுதியாக உள்ளது.இந்தநிலையில் தற்போது முதலாம் ஆண்டு பயிற்சி டாக்டர்களுக்கு 10.3 சதவீதமும், இளநிலை டாக்டர்களுக்கு 8.8 சதவீதமும், மருத்துவ ஆலோசகர்களுக்கு 6 சதவீதமும் சம்பள உயர்வு வழங்கப்படும் என அரசாங்கம் அறிவித்துள்ளது.
இதன்மூலம் அவர்களுக்கு கணிசமாக சம்பளம் உயர்வதோடு பணவீக்கமும் ஓரளவு கட்டுப்பாட்டில் இருக்கும் என கருதப்படுகிறது. அரசின் இந்த அறிவிப்பால் நாடு முழுவதும் உள்ள சுமார் 1 லட்சத்து 50 ஆயிரம் இளநிலை டாக்டர்கள் பயன்பெறுவார்கள் என இங்கிலாந்து சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது