டாக்டர் போல் நடித்து நோயாளியிடம் ரூ.2¼ லட்சம் நகை திருட்டு

பெங்களூரு, ஜன. 17-1பெங்களூரு அசோக்நகர் போலீஸ் நிலையத்திற்கு உட்பட்ட பகுதியில் உள்ள தனியார் ஆஸ்பத்திரிக்கு கடந்த 11-ந்தேதி காலை சரசம்மா என்ற மூதாட்டி மூச்சுத்திணறல் காரணமாக அனுமதிக்கப்பட்டார். இந்த நிலையில் அன்று மதியம் 12 மணி அளவில் டாக்டர் போல் சீருடையில் வந்த பெண் ஒருவர், சரசம்மாவுக்கு மருத்துவ பரிசோதனை செய்ய வேண்டும் என்று கூறி குடும்பத்தினரை வெளியே அனுப்பியுள்ளார். பின்னர் மர்மபெண், சரசம்மா அணிந்திருந்த ரூ.2¼ லட்சம் மதிப்புள்ள தங்கநகைகளை திருடி விட்டார். சிறிது நேரத்திற்கு பிறகு சரசம்மாவை பார்க்க வந்த குடும்பத்தினர், தங்க நகைகள் திருடப்பட்டு இருப்பதை பார்த்து அதிர்ச்சி அடைந்தனர். உடனே அவர்கள் டாக்டர் சீருடையில் வந்த பெண்ணை தேடி பார்த்தனர். மேலும் இதுபற்றி ஆஸ்பத்திரி நிர்வாகத்திடம் புகார் கொடுத்தனர். அவர்கள் கண்காணிப்பு கேமராவை ஆய்வு செய்து பார்த்தனர். அப்போது ஒரு பெண் டாக்டர் போல் சீருடை அணிந்து சென்று, சரசம்மாவிடம் நகைகளை கைவரிசை காட்டி செல்லும் காட்சிகள் பதிவாகி இருந்தது. இதையடுத்து சம்பவம் பற்றி அசோக்நகர் போலீசில் புகார் அளிக்கப்பட்டது. அதன் அடிப்படையில் போலீசார் வழக்குப்பதிவு செய்து, கண்காணிப்பு கேமராவில் பதிவான காட்சி மூலம் நோயாளியிடம் நகைகளை திருடிய பெண்ணை வலைவீசி தேடி வருகிறார்கள்.