டாமன் நிகழ்ச்சியில் மத்திய மந்திரிகள் பங்கேற்பு

டாமன் டையூ, நவ. 21- மீன்பிடித் துறையை மேம்படுத்தும் நடவடிக்கைகளில் மத்திய அரசு ஈடுபட்டு வருகிறது. மீன்வளர்ப்பை தீவிரப்படுத்துதல் மற்றும் மீன்வள மேலாண்மையை மேம்படுத்துதல் ஆகியவற்றின் மூலம் மீன் வளர்ப்பு தொழிலில் ஈடுபட்டுள்ளவர்களின் வருவாயை அதிகரிக்க திட்டமிடப்பட்டுள்ளது. மத்திய மீன்வளத்துறை அமைச்சகம் மற்றும் தேசிய மீன்வள மேம்பாட்டு வாரியம் ஆகியவை இணைந்து இன்று உலக மீன்பிடி தின கொண்டாட்டத்திற்கான ஏற்பாடுகளை செய்துள்ளன. நாட்டின் மேற்கு கடற்கரை பகுதியில் அமைந்துள்ள டாமன் நகரில் உள்ள சுவாமி விவேகானந்தர் அரங்கத்தில் நடைபெறும் நிகழ்ச்சியில் மத்திய மீன்வளத்துறை மந்திரி பர்ஷோத்தம் ரூபாலா, இணை மந்திரிகள் சஞ்சீவ் குமார் பல்யான், எல்.முருகன் மற்றும் அரசுத்துறையைச் சேர்ந்த உயர் அதிகாரிகள் இதில் கலந்து கொள்கின்றனர்.
நிகழ்ச்சியில் கடந்த மூன்று ஆண்டுகள் வரை சிறப்பாக செயல்பட்ட மாநிலங்கள் மற்றும் மீன் வளம் சார்ந்த நடவடிக்கைகளில் சிறப்பாக செயல்பட்ட பல்வேறு நிறுவனங்களுக்கு விருது வழங்கப்படும் என்று, மத்திய மீன்வளத்துறை வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.