டிகே சிவக்குமாரை மீறி மண்டியாவில் குமாரசாமி வெல்வாரா?

மண்டியா: ஏப். 11-
காவிரிக்கு நீர் ஆதாரமாக அமைந்துள்ள கர்நாடகாவின் மண்டியா லோக்சபா தேர்தலில் காங்கிரஸின் டிகே சிவக்குமாரை மீறி ஜேடிஎஸ் மாநில தலைவரும், முன்னாள் முதல்வருமான எச்டி குமாரசாமி வெல்வாரா என்ற பெரிய கேள்வி எழுந்துள்ளது. இந்த கேள்விக்கான பதிலை இந்த செய்தியில் பார்க்கலாம். கர்நாடகாவில் 2 கட்டமாக லோக்சபா தேர்தல் நடைபெற உள்ளது. ஏப்ரல் 26, மே 7 ம் தேதிகளில் அங்கு ஓட்டுப்பதிவு நடைபெற உள்ளது. இதில் ஏப்ரல் 26ம் தேதி மண்டியா லோக்சபா தொகுதிக்கு தேர்தல் நடைபெற உள்ளது. தமிழ்நாட்டில் காவிரி ஆற்றுக்கு தண்ணீர் வழங்கும் கேஆர்எஸ் அணை இங்கு தான் உள்ளது. இந்த மாவட்டத்தில் அதிகளவில் விவசாயிகள் உள்ளன. குறிப்பாக கரும்பு விவசாயிகள் தான் அதிகம் உள்ளனர். மண்டியா லோக்சபா தொகுதியில் மொத்தம் 8 சட்டசபை தொகுதிகள் உள்ளன. மண்டியா மாவட்டத்தின் மலவள்ளி, மத்தூர், மேலுகோ்டை, மண்டியா, ஸ்ரீரங்கப்பட்டணா, நாகமங்களா, கேஆர் பேட்டை, மைசூர் மாவட்டத்தின் கிருஷ்ணராஜநகர் உள்ளிட்ட தொகுதிகள் உள்ளன. இதில் 6 சட்டசபை தொகுதிகள் காங்கிரஸ் வசம் உள்ளது. கிருஷ்ணராஜ்பேட்டை சட்டசபை தொகுதி ஜேடிஎஸ் கட்சியிடமம், மேலுகோ்டை சர்வோதயா கர்நாடகா பக்சா கட்சியிடமும் உள்ளது. ஒக்கலிகர் மக்கள்: மண்டியாவை பொறுத்தமட்டில் வெற்றியை நிர்ணயிக்கும் சக்தியாக ஒக்கலிகர் சமுதாயத்தை சேர்ந்தவர்கள் தான் உள்ளனர்.. காங்கிரஸ் மற்றும் முன்னாள் முதல்வர் குமாரசாமியின் ஜேடிஎஸ் கட்சி தான் இந்த தொகுதியில் மாறி மாறி வெற்றி பெற்று வருகிறது. 1952 முதல் 2019 வரை மொத்தம் 21 தேர்தல்கள் (4 இடைத்தேர்தல்கள்) நடந்துள்ளன. இதில் 14 முறை காங்கிரஸ் கட்சியும், 3 முறை ஜேடிஎஸ் கட்சியும், பிரஜா சோசியலிஸ்ட் கட்சி, ஜனதாதளம், ஜனதா கட்சி தலா ஒரு முறை வென்றுள்ளன.
குமாரசாமி போட்டி: தற்போது சுமலதா அம்பரீஷ் பாஜகவில் உள்ளார். இந்த முறை அவருக்கு வாய்ப்பு வழங்கப்படவில்லை. கர்நாடகவில் பாஜகவும், ஜேடிஎஸ் கட்சியும் கூட்டணி அமைத்துள்ளன. இதில் ஜேடிஎஸ் கட்சிக்கு மண்டியா ஒதுக்கப்பட்டுள்ளது. ஜேடிஎஸ் சார்பில் அதன் மாநில தலைவரும், முன்னாள் முதல்வருமான எச்டி குமாரசாமி போட்டியிடுகிறார். அவரை எதிர்த்து காங்கிரஸ் கட்சி ஸ்டார் சந்துரு என்பவரை வேட்பாளராக நிறுத்தி உள்ளது. இவர்கள் 2 பேர் இடையே தான் இந்த தொகுதியில் போட்டி உள்ளது. இவர்கள் 2 பேரும் ஒக்கலிகர் சமுதாயத்தை சேர்ந்தவர்கள். இதனால் வெல்வது யார்? என்ற பெரிய எதிர்ப்பார்ப்பு எழுந்துள்ளது.