டிக்கெட் கட்டணம் குறைப்பு

சென்னை:பிப் .27: கொரோனா காலத்தில் உயர்த்தப்பட்ட பயணிகள் ரயில் கட்டணம் 4 ஆண்டுகளுக்குப் பின் குறைக்கபப்ட்டுள்ளது. தெற்கு ரயில்வேயில் கொரோனா காலத்திற்கு முன்பு பயணிகள் ரயிலில் குறைந்த கட்டணம் வசூலிக்கப்பட்டது. குறைந்தபட்ச கட்டணம் 10 ரூபாயாக இருந்தது. கொரோனா காலத்துக்கு பிறகு மீண்டும் ரெயில் சேவை தொடங்கியபோது அது 30 ரூபாயாக அதிகரிக்கப்பட்டது. கொரோனா காலத்தில் சிறப்பு கட்டண ரயில்களாக மாற்றப்பட்ட சாதாரண ரயில்களின் எண்கள் 1- லிருந்து தொடங்கும்படி மாற்றி அமைக்கப்பட்டது. கட்டண உயர்வால் பயணிகள் கடும் அவதிப்பட்டு வந்தனர்.
தற்போது பழைய கட்டணம் வசூலிக்கப்படுவதால் சாதாரண ரயில்களின் எண்கள் பூஜ்யத்தில் இருந்து தொடங்கும்படி மீண்டும் மாற்றப்பட்டது. மேலும் 200 கிலோ மீட்டருக்கும் குறைவான தொலைவுக்கு இயக்கப்படும் பயணிகள் ரயில்களில் பழைய கட்டணமே வசூலிக்க உத்தரவிடப்பட்டுள்ளது. நெல்லை-அம்பை-தென்காசி செல்லும் பயணிகள் ரயிலில் குறைந்த பட்ச கட்டணமாக ரூ.30 வசூலிக்கப்பட்ட நிலையில், தற்போது ரூ.10- ஆக குறைக்கப்பட்டுள்ளது. அதிகாரபூர்வ அறிவிப்பு வெளியிடப்படவில்லை என்றாலும், நேற்று முதல் பழைய கட்டணத்தையே வசூலித்து வருகின்றனர். இதனால் பயணிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.