டிசம்பர் 7ம் தேதி முதல் பாராளுமன்ற குளிர்கால கூட்டத் தொடர்

புதுடெல்லி, நவம்பர். 12 – பாராளுமன்றத்திற்கு புதிய கட்டடம் கட்டும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வரும் நிலையில், குளிர்கால கூட்டத்தொடர் புதிய கட்டடத்தில் நடத்தப்படும் என தகவல்கள் வெளியாகின. பாராளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் ஒவ்வொரு ஆண்டும் நவம்பர் மாதம் 3-வது வாரத்தில் தொடங்கி நடைபெறும். இந்த ஆண்டு குஜராத் மற்றும் இமாச்சல பிரதேச சட்டசபைத் தேர்தல்கள் காரணமாக டிசம்பர் மாதத்தில் குளிர்கால கூட்டத்தொடர் தொடங்கும் என கூறப்படுகிறது. அதன்படி நடப்பு ஆண்டிற்கான குளிர்கால கூட்டத்தொடரை டிசம்பர் 7-ந்தேதி தொடங்கி 29-ந்தேதி வரை நடத்த மத்திய அரசு திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. புதிய பாராளுமன்றத்திற்கான கட்டட பணிகள் இன்னும் நிறைவடையாததால், இந்த ஆண்டும் வழக்கம் போல் பாரம்பரிய பாராளுமன்ற கட்டிடத்திலேயே குளிர்கால கூட்டத் தொடர் நடைபெறும் என தெரிகிறது.