டிசிஎஸ் நிறுவனத்தில்2000 ஊழியர்கள் இடமாற்றம்

டெல்லி, நவ. 16- இந்தியாவின் மிகப்பெரிய டெக் சேவை நிறுவனமாக இருக்கும் டாடா கன்சல்டன்சி சர்வீசஸ் சமீபத்தில் வொர்க் ப்ரம் ஹோம் சலுகையை ஊழியர்களுக்குக் கட் செய்துவிட்டு அனைத்து அசோசியேட் ஊழியர்களையும் கண்டிப்பான டிரஸ் கோட் உடன் கட்டாயம் வாரத்தில் 5 நாளும் அலுவலகம் வர வேண்டும் என்ற முக்கியமான அறிவிப்பை வெளியிட்டது. இதுவே பலருக்கும் பெரும் அதிர்ச்சி அளிக்கும் விஷயமாக மாறியிருக்கும் வேளையில் டிசிஎஸ் நிறுவனம் தற்போது சுமார் 2000 ஊழியர்களுக்கு அதிர்ச்சி அளிக்கும் ஈமெயில் அனுப்பியுள்ளது. இதில் டிசிஎஸ் நிர்வாகம் வர்த்தகக் காரணமாக உங்களின் பணியிடத்தை மாற்றுகிறது எனத் தெரிவிக்கப்பட்டு இருந்தது.
இது மட்டும் அல்லாமல் அடுத்த 2 வாரத்திற்குள் உங்களின் புதிய வொர்க் லொகேஷனுக்குச் சென்று லாகின் செய்ய வேண்டும் என்றும், டிரான்ஸ்பர் செய்யப்படும் ஊழியர்களின் பயணத்திற்கான விமான டிக்கெட், தங்கம் செலவுகளை நிறுவனத்தின் கொள்கைகள் படி திருப்பிச் செலுத்தப்படும் என அறிவிக்கப்பட்டு உள்ளது.
இந்த நிலையில் ஐடி ஊழியர்களுக்கான அமைப்பாக விளக்கும் NITES எனப்படும் Nascent Information Technology Employees Senate, டிசிஎஸ் நிறுவனத்தின் இந்தச் செயல்பாடுகள் நெறிமுறையற்ற டிரான்ஸ்பர் நடைமுறைகள் எனக் குற்றம்சாட்டியது மட்டும் அல்லாமல் மத்திய தொழிலாளர்கள் மற்றும் வேலைவாய்ப்பு அமைச்சகத்திற்குக் கடிதம் அனுப்பியுள்ளது. NITES அமைப்பு தனது கடிதத்தில் டிசிஎஸ் நிறுவனம் தனது ஊழியர்களின் பணியிடங்களை எவ்விதமான முன் ஆலோசனைகள் இல்லாமல் ஒரு நகரத்திலிருந்து மற்றொரு நகரத்திற்கு மாற்றுவதைக் கட்டாயப்படுத்துகிறது. டிசிஎஸ் நிறுவனத்தின் இந்த நடவடிக்கை மூலம் பல வருடமான தங்கி பணியாற்றி வரும் ஊழியரை தன்னுடைய வீடு, சமுகம் ஆகியவற்றில் இருந்து பிடுங்குகிறது. டிசிஎஸ் நிறுவனத்தின் இந்தச் செயல்பாடுகள் டிசிஎஸ் ஊழியர்கள் மற்றும் அவர்களது குடும்பங்களுக்குப் பெரும் சிரமத்தை ஏற்படுத்துகிறது என்று NITES அமைப்பு மத்திய தொழிலாளர் அமைச்சர் பூபேந்தர் யாதவுக்கு எழுதிய கடிதத்தில் கூறியுள்ளது. மேலும் அதில் டிசிஎஸ்-ன் நடவடிக்கைகள் நெறிமுறையற்றவை மற்றும் தொழிலாளர் சட்டங்களை மீறுவதாக நாங்கள் நம்புகிறோம் எனவும் குறிப்பிட்டு உள்ளது.