டிச. 1ம் தேதி முதல் பெங்களூரில்தமிழ் புத்தக திருவிழா

பெங்களூரு, நவ.12-
பெங்களூரு தி இன்ஸ்டிடுயூட் ஆப் என்ஜினியர்ஸ் வளாகத்தில் டிச. 1 ஆம் தேதி முதல் 10 ஆம் தேதி வரை 10 நாள் தமிழ் புத்தக திருவிழா தொடங்கி நடைபெற உள்ளது.இது குறித்து சனிக்கிழமை கர்நாடக தமிழ் பத்திரிகையாளர் சங்க அலுவலகத்தில் தமிழ்ப் புத்தகத் திருவிழாவின் மதிப்புறு வழிகாட்டி பேரா.முனைவர் கு.வணங்காமுடி அவர்கள் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டி: கடந்த ஆண்டு பெங்களூரில் நடைபெற்ற முதல் தமிழ்ப் புத்தக திருவிழா சிறப்பாக நடைபெற்றதற்கு தமிழ் ஊடகங்கள்தான் முக்கிய காரணம். அந்த ஊடகத்துறையின் துணையோடு இண்டாம் ஆண்டு தமிழ்ப் புத்தக திருவிழாவை டிச. 1 ஆம் தேதி முதல் 10 ஆம் தேதி வரை பெங்களூரு தி இன்ஸ்டிடுயூட் ஆப் என்ஜினியர்ஸ் வளாகத்தில் நடத்த உள்ளோம். 27 அரங்குகளில் நடைபெறும் திருவிழாவில் கன்னட புத்தகங்கள் விற்பனை செய்யும் அரங்குகளும் இடம்பெற்றுள்ளன.
விழாவை கர்நாடக மாநில சுகாதாரத்துறை அமைச்சர் தினேஷ்குண்டுராவ் தொடக்கி வைக்க உள்ளார். ஐஏஎஸ் அதிகாரி டாக்டர் ராம்பிரசாத்மனோகர் சிவாஜிநகர் தொகுதி எம்.எல்.ஏ ரிஸ்வான் அர்ஷத், பெங்களூரு மத்திய தொகுதி மக்களவை உறுப்பினர் பி.சி.மோகன், தி இன்ஸ்டிடுயூட் ஆப் என்ஜினியர்ஸின் தலைவர் லட்சுமண், செயலாளர் ரங்காரெட்டி ஆகியோர் கலந்து கொள்ள உள்ளனர். தினந்தோறும் இலக்கிய மாலை நிகழ்ச்சி நடைபெற உள்ளது. இதில் இஸ்ரோ விஞ்ஞானிகள் மயில்சாமி அண்ணாதுரை, நாராயணன், வீரமுத்துவேல் ஆகியோர் கலந்து கொள்ள உள்ளனர். மேலும் இலக்கிய ஆளுமையாக அறிவுமதி, நெல்லை ஜெயந்தா, பேராசிரியர் அப்துல்காதர் உள்ளிட்டோர் கலந்து கொள்கின்றனர்.
10வது நாளில் வேலூர் விஐடி பல்கலைக்கழகத்தின் துணை வேந்தர் விஸ்வநாதன் அவர்கள் கலந்து கொண்டு, தமிழின் ஆளுமைகள் 15 பேருக்கு விருது வழங்கி கௌரவிக்க உள்ளார். தமிழறிஞர் குணா அவர்களுக்கு தமிழ் பெருந்தகை விருது வழங்கப்பட உள்ளது. போட்டியில் இடம்பெற்ற சிறந்த நூல்களுக்கு மொத்த பரிசு தொகை ரூ. 25 ஆயிரம் வழங்கப்படுகிறது. மாணவர்களுக்கான மொழித்திறன் போட்டி நடத்தப்பட்டு அதற்காக ரூ. 1 லட்சம் பரிசு தொகை வழங்கப்பட உள்ளது. விழாவில் கவியரங்கம், கருத்தரங்கம், பட்டிமன்றம், நாடகம் உள்ளிட்டவை நடைபெறுகின்றன. தமிழ்ப் புத்தக திருவிழாவிற்கு பெங்களூரு வாழ்த் தமிழர்கள் மட்டுமின்றி, கர்நாடகம் முழுவதிலிருந்தும், தமிழ்நாடு, புதுச்சேரி ஆகிய மாநிலங்களிலிருந்தும் திரளாக கலந்து கொண்டு, விழா சிறப்புற ஒத்துழைப்பு வழங்க வேண்டும் என்றார். பேட்டியின் போது சிறப்பு மலர்க்குழு ஆசிரியர் கி.சு.இளங்கோவன், தமிழ் மொழித்திறன் போட்டிக்குழு பொறுப்பாளர் புலவர் மா.கார்த்தியாயினி, தமிழ் மரபு விளையாட்டுக்குழு பொறுப்பாளர் செல்வி. இம்மாக்குலெட் அந்தோணி உள்ளிட்ட கர்நாடக தமிழ்ப் பத்திரிகையாளர் சங்க நிர்வாகிகள் உடன் இருந்தனர்.