டிச.2, 3-ல் மிக கனமழை

சென்னை: நவ.30- வங்கக் கடலில் உருவாகும் புயல் காரணமாக சென்னை உள்ளிட்ட 5 மாவட்டங்களில் வரும் 2, 3-ம் தேதிகளில் மிக கனமழை பெய்யக்கூடும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதுதொடர்பாக இந்திய வானிலை ஆய்வு மைய தென் மண்டலத் தலைவர் எஸ்.பாலச்சந்திரன் செய்தியாளர்களிடம் நேற்று கூறியதாவது:
தெற்கு அந்தமான் கடல் பகுதிகளில் நிலவிய காற்றழுத்த தாழ்வுப் பகுதி, ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதியாக வலுப் பெற்றுள்ளது. இது தென்கிழக்கு வங்கக் கடல் பகுதிகளில் காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற்று வடமேற்கு திசையில் நகர்ந்து, தென்மேற்கு மற்றும் தென்கிழக்கு வங்கக் கடல் பகுதிகளில் டிச. 2-ம் தேதி புயலாக வலுப்பெறும்.
மேலும், வடக்கு இலங்கை மற்றும் அதையொட்டிய பகுதிகளில் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதனால் டிச. 3-ம் தேதி வரை தமிழகத்தின் பெரும்பாலான இடங்களில் இடி, மின்னலுடன் கூடிய, லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.
நவ. 30-ம் தேதி (இன்று) காஞ்சிபுரம், செங்கல்பட்டு, விழுப்புரம், கடலூர், தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை, புதுக்கோட்டை, ராமநாதபுரம் மாவட்டங்கள் மற்றும் புதுச்சேரியில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.
டிச.1-ம் தேதி (நாளை) டெல்டா மாவட்டங்கள் மற்றும் கடலூர் மாவட்டத்தில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.
வரும் 2, 3-ம் தேதிகளில் சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு, விழுப்புரம் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கன முதல் மிக கனமழை பெய்யக்கூடும். வரும் 2-ம் தேதி டெல்டா மாவட்டங்கள் மற்றும் கடலூர், புதுக்கோட்டை மாவட்டங்களிலும், 3-ம் தேதி மேற்கூறிய மாவட்டங்கள் மற்றும் ராணிப்பேட்டை, திருவண்ணாமலை மாவட்டங்களிலும் ஓரிரு இடங்களில் கனமழை பெய்யக்கூடும்.
வரும் 4-ம் தேதி சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு, ராணிப்பேட்டை மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளது.