டிரைவர் சுட்டுக்கொலை- தவறுதலாக சுட்ட நண்பர் கைது

திருவனந்தபுரம்: ஆக. 28:
கேரள மாநிலம் எர்ணாகுளம் பகுதியை சேர்ந்த டாக்சி டிரைவர் ஷாபி. நேற்று இவர் தனது நண்பர்களுடன் மலப்புரத்தில் நடந்த திருமண நிகழ்ச்சிக்கு சென்றார். பின்பு சஜீவ் என்பவரின் வீட்டுக்கு அவர்கள் அனைவரும் சென்றனர். நண்பர்கள் அனைவரும் ஒன்றாக சேர்ந்து அமர்ந்து பேசிக்கொண்டிருந்தனர். அப்போது சஜீவ் கையில் வைத்திருந்த ஏர்கன் வெடித்து ஷாபி உடலில் துப்பாக்கி குண்டு பாய்ந்தது.
இதையடுத்து அவரை நண்பர்கள் அனைவரும் சேர்ந்து மீட்டு திருச்சூரில் உள்ள தனியார் ஆஸ்பத்திரிக்கு சிகிச்சைக்காக சேர்த்தனர். அங்கு அவரை பரிசோதித்த டாக்டர்கள், அவர் ஏற்கனவே இறந்துவிட்டதாக தெரிவித்தனர். இதுகுறித்து பெரும்படம்பு போலீஸ் நிலையத்துக்கு தகவல் கொடுக்கப்பட்டது. இதையடுத்து போலீசார், ஷாபியின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். சம்பவம் குறித்து ஷாபியின் நண்பர்களிடம் விசாரணை நடத்தினர்.
அப்போது சஜீவின் கையில் இருந்த துப்பாக்கி தவறுதலாக வெடித்து ஷாபி மீது துப்பாக்கி குண்டு பாய்ந்ததாக தெரிவித்தனர். இதையடுத்து சஜீவை போலீசார் கைது செய்தனர்.