டி.ஆர்.பாலு – அண்ணாமலை மோதல்

சென்னை: பிப். 8: அண்ணாமலைக்கு பதில் சொல்லும் அளவுக்கு நான் தாழ்ந்து போய்விட்டேனா என்று டி.ஆர்.பாலு கேட்க, நீங்கள் மலிவான மனிதரா என்பதை 65 ஆண்டுகால அரசியல் வாழ்க்கை தீர்மானிக்காது என்றுஅண்ணாமலை பதிலடி கொடுத்துள்ளார்.
நாடாளுமன்றத்தில் நேற்று முன்தினம் நடைபெற்ற விவாதத்தில் திமுக நாடாளுமன்றக் குழுத்தலைவர் டி.ஆர்.பாலு பேசும்போது, மத்திய இணையமைச்சர் எல்.முருகன் குறுக்கிட்டு பேசினார்.
அப்போது எல்.முருகனை, அமைச்சராக இருக்கத் தகுதியற்றவர் என்று டி.ஆர்.பாலு கூறியதால் சர்ச்சை ஏற்பட்டது. இதையடுத்து, டி.ஆர்.பாலு மன்னிப்புக் கோர வேண்டும் என்று மத்திய அமைச்சர்கள் தெரிவித்தனர்.
இந்நிலையில், பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை, அமைச்சர் எல்.முருகனை தகுதியற்றவர் என்று குறிப்பிட்டு, பட்டியலின மக்களை டி.ஆர்.பாலு அவமானப்படுத்தியதாகவும், அவர் நிபந்தனையற்ற மன்னிப்பு கோர வேண்டும் என்றும் தெரிவித்திருந்தார்.
இந்நிலையில், சென்னை விமான நிலையத்தில் டி.ஆர்.பாலுவிடம், அண்ணாமலை கருத்து குறித்து செய்தியாளர்கள் கேட்டனர். அப்போது டி.ஆர்.பாலு, ‘‘அண்ணாமலைக்கு எல்லாம் பதில் சொல்லும் அளவுக்கு நான் மலிவாகி விட்டேனா? அவர் தற்போது அரசியலுக்கு வந்தவர். அவருக்கெல்லாம் நான் பதில் சொல்ல வேண்டியதில்லை. நான் 65 ஆண்டுகளாக அரசியலில் உள்ளேன். நேற்று வந்தவர் அண்ணாமலை. அவருக்கு பதில் சொல்லும் அளவுக்கு நான் தாழ்ந்து போய்விட்டேனா’’ என்று ஆவேசமாகப் பேசினார்.
இந்நிலையில், அண்ணாமலை தனது எக்ஸ் வலைதளப் பக்கத்தில், ‘‘நீங்கள் மலிவான மனிதரா என்பதை, உங்கள் 65 ஆண்டு அரசியல் வாழ்க்கை தீர்மானிக்காது. உங்கள் சிந்தனையும், செயல்பாடுகளுமே தீர்மானிக்கும் என்பதை திமுக எம்.பி. டி.ஆர்.பாலுவுக்குத் தெரிவித்துக் கொள்கிறேன்’’ எனத் தெரிவித்துள்ளார்.