டி.வி.யை அணைத்ததால் ஆத்திரம்: மாமியார் கை விரல்களை கடித்த மருமகள்

மும்பை : செப்.8
தானே மாவட்டம் அம்பர்நாத்தை சேர்ந்தவர் விருஷாலி (வயது 60). சம்பவத்தன்று இவர் வீட்டில் பஜனை பாடி கொண்டு இருந்தார். அப்போது, அவரது மருமகள் விஜயா(32) டி.வி.யை அதிக சத்தத்துடன் வைத்து பார்த்து கொண்டு இருந்தார். தான் பஜனை பாடுவதால் டி.வி. சத்தத்தை குறைக்கும்படி மாமியார் கேட்டுக்கொண்டார். ஆனால் அதற்கு மருமகள் செவிசாய்க்கவில்லை என்று கூறப்படுகிறது.
இதனால் மாமியார் விருஷாலி டி.வி.யை அணைத்தார்.
இதனால் வெறி கொண்ட மருமகள் விஜயா, தனது மாமியாரின் கையை பற்றிக்கொண்டு விரல்களை கடித்து குதறினார்.
இதில் வலி தாங்க முடியாமல் விருஷாலி கதறி துடிக்கவே, அவரது மகன் ஓடி வந்து தடுக்க முயன்றார். ஆத்திரம் தணியாத விஜயா தனது கணவர் என்றும் பாராமல் அவரது கன்னத்தில் ஓங்கி அறை விட்டார்.
இதில் கணவர் செய்வதறியாமல் திகைத்து போனார். இதற்கிடையே மருமகள் கடித்ததில் விருஷாலியின் 3 விரல்களில் பலத்த காயம் ஏற்பட்டது. அவர் ஆஸ்பத்திரிக்கு சென்று சிகிச்சை பெற்றார்.
மேலும் மருமகள் மீது சிவாஜிநகர் போலீசில் புகார் அளித்தார். அதன்பேரில் போலீசார் விஜயா மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.