டி20 சாம்பியனுக்கு அதிர்ச்சி அளித்த ஆஸ்திரேலியா

சிட்னி: நவம்பர். 20 – இங்கிலாந்து அணி ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் செய்து 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் விளையாடி வருகிறது. முதல் ஒருநாள் போட்டியை ஆஸ்திரேலிய அணி வென்றது. இந்நிலையில், இரண்டாவது ஒருநாள் போட்டி சிட்னி மைதானத்தில் நேற்று நடைபெற்றது. டாஸ் வென்ற ஆஸ்திரேலியா முதலில் பேட்டிங் தேர்வு செய்தது. அதன்படி, முதலில் ஆடிய ஆஸ்திரேலியா அணி நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவர் முடிவில் 8 விக்கெட் இழப்புக்கு 280 ரன்கள் எடுத்தது. அதிகபட்சமாக ஸ்டீவ் ஸ்மித் 94 ரன்களும், லபுஷேன், மார்ஷ் அரைசதமும் அடித்தனர். இங்கிலாந்து சார்பில் அடில் ரஷித் 3 விக்கெட்டு கைப்பற்றினார்.
இதையடுத்து 281 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் இங்கிலாந்து அணி களமிறங்கியது. 34 ரன்களுக்குள் 3 முக்கிய விக்கெட்டுகளை இழந்தது இங்கிலாந்து. அடுத்து ஆடிய ஜேம்ஸ் வின்ஸ், சாம் பில்லிங்ஸ் ஜோடி பொறுப்புடன் ஆடி அரை சதமடித்தனர். 4-வது விக்கெட்டுக்கு 122 ரன்கள் சேர்த்த நிலையில் வின்ஸ் 60 ரன்னில் அவுட்டானார். சாம் பில்லிங்ஸ் 71 ரன்னில் ஆட்டமிழந்தார். சாம்பா அசத்தலாக பந்து வீசினார். இறுதியில், இங்கிலாந்து 208 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. இதன்மூலம் 72 ரன்கள் வித்தியாசத்தில் வென்ற ஆஸ்திரேலியா ஒருநாள் தொடரை 2-0 என கைப்பற்றி அசத்தியது. ஆஸ்திரேலியா சார்பில் மிட்செல் ஸ்டார்க், சாம்பா தலா 4 விக்கெட் வீழ்த்தினர்.