டெல்லிக்கு விவசாயிகள் படையெடுப்பு

புதுடெல்லி, பிப். 13: குறைந்தபட்ச ஆதரவு விலை, சுவாமிநாதன் அறிக்கையை அமல்படுத்த வேண்டும், விவசாயிகளுக்கு ஓய்வூதிய வசதி உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை நிறைவேற்றக் கோரி டெல்லியில் 200க்கும் மேற்பட்ட விவசாயிகள் அமைப்புகள் சார்பில் இன்று சலோ போராட்டம் நடைபெற்றது. போராட்டக்காரர்களை அடக்குவதற்காக தலைநகர் டெல்லியைச் சுற்றி ஊடுருவ முடியாத அளவிற்கு போலீசார் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகளை செய்துள்ளனர்.
விவசாயிகள் டிராக்டர்களில் வருவதை தடுக்க சிமென்ட் தடுப்பு வேலிகள் மற்றும் கம்பி வேலிகளை அமைத்து, 5 ஆயிரம் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். டெல்லியில் தடை உத்தரவு அமல்படுத்தப்பட்டு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது.
மத்திய அமைச்சர் உணவு மற்றும் நுகர்வோர் விவகாரங்கள் துறை அமைச்சர் பியூஷ் கோயல் மற்றும் விவசாயத் துறை அமைச்சர் அர்ஜுன்முண்டா ஆகியோர் விவசாயத் தலைவர்களுடன் நடத்திய பேச்சு வார்த்தை தோல்வி அடைந்தது.
இதுகுறித்து விவசாயிகள் தலைவர் சர்வாங்சிங் பாந்தர் கூறியதாவது: கோரிக்கைகளை நிறைவேற்றக்கோரி டெல்லிக்கு பேரணியாக சென்றுள்ளோம். விவசாயிகள் தில்லிக்கு வருவதைத் தடுக்கும் வகையில், விவசாயிகளின் அணிவகுப்பைத் தடுக்க நெடுஞ்சாலைகளில் பிரமாண்ட சிமென்ட் கற்கள் வைக்கப்பட்டுள்ளன. மேலும் சாலைகளில் ஆணியடிக்கப்பட்டது. இதனுடன் எல்லையில் போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு, முற்றுகை இடப்பட்டுள்ளது.
காவல்துறையின் எந்த வியூகத்திற்கும் அடிபணியாமல் பாதயாத்திரை நடத்த விவசாயிகள் அமைப்புகளின் தலைவர்கள் உறுதியான முடிவு எடுத்துள்ளனர். அப்போது விவசாயிகளுக்கும், போலீசாருக்கும் இடையே வாக்குவாதம், வாய்த் தகராறு ஏற்படும் என தெரிகிறது.
பஞ்சாபின் பல்வேறு பகுதிகளில் இருந்து டிராக்டர் தள்ளுவண்டிகள் போராட்டத்தில் கலந்துகொள்வதற்காக முக்கிய இடத்தில் ஏற்கனவே குவிந்துள்ளன. பயிர்களுக்கு குறைந்தபட்ச ஆதரவு விலையை உறுதி செய்ய சட்டம் கோரி போராட்டம் நடைபெற்று வருகிறது. இதனால் ஓராண்டுக்கு பிறகு மத்திய அரசுக்கும் விவசாயிகளுக்கும் இடையே மீண்டும் மோதல் ஏற்பட்டுள்ளது.
தேசிய தலைநகரில், போக்குவரத்து கட்டுப்பாடுகள் அமல்படுத்தப்பட்டுள்ளன. ஊர்வலத்தை முன்னிட்டு சிங்கு, காஜிபூர் மற்றும் திக்ரி எல்லைகளில் போராட்டக்காரர்களை ஏற்றிச் செல்லும் வாகனங்கள் நகருக்குள் நுழைவதைத் தடுக்க பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.
விவசாயிகள் மற்றும் மத்திய அமைச்சர்கள் இடையே 5 மணி நேரம் நடந்த பேச்சுவார்த்தையில் ஒருமித்த கருத்து ஏற்படாததால் இன்று முதல் 200க்கும் மேற்பட்ட விவசாயிகள் அமைப்புகள் டெல்லி நோக்கி புறப்படுகின்றனர்.
சம்யுக்தா கிசான் மோர்ச்சா மற்றும் கிசான் மஸ்தூர் மோர்ச்சா ஆகிய 200க்கும் மேற்பட்ட விவசாயிகள் சங்கங்கள் டெல்லி சலோவில் இணைந்து தங்கள் கோரிக்கைகளை ஏற்குமாறு மத்திய அரசுக்கு அழுத்தம் கொடுத்துள்ளன.தில்லியில் போராட்டம் நடத்தும் விவசாயிகள் நகருக்குள் நுழைவதைத் தடுக்க, தேசிய தலைநகர் டெல்லி அருகே சிங்கு, திக்ரி மற்றும் காஜிபூரில் உள்ள எல்லைகளை மூடுவதற்கு பல அடுக்கு தடுப்புகளுடன் கூடிய பலத்த போலீஸ் மற்றும் துணை ராணுவப் பணியாளர்கள் குவிக்கப்பட்டுள்ளனர்.விவசாயிகள் டெல்லிக்கு செல்வதற்கு முன்பு ஃபதேகர் சாஹிப்பில் செய்தியாளர் சந்திப்பை நடத்திய விவசாயத் தலைவர்கள், தங்கள் கோரிக்கைகள் நிறைவேறும் வரை போராட்டத்தில் இருந்து பின்வாங்க மாட்டோம் என்று முழக்கமிட்டனர். இதனால் போலீசாருக்கும், விவசாயிகளுக்கும் இடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டது.தலைமை நீதிபதிக்கு கடிதம்
விவசாயிகள் கோரிக்கைகளை நிறைவேற்ற டெல்லி சலோ போராட்டத்தில் ஈடுபட்டுள்ளதால், பொதுமக்களுக்கு சிரமம் ஏற்படும். இந்நிலையில், உச்ச நீதிமன்ற வழக்கறிஞர்கள் சங்கத் தலைவர் ஆதிஷ் அகர்வால், உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதிக்கு கடிதம் எழுதியுள்ளார். டெல்லிக்குள் நுழைய முயற்சிக்கும் விவசாயிகள் மீது தானாக முன்வந்து வழக்கு போட வேண்டும். வழக்கறிஞர்கள் நீதிமன்ற நடவடிக்கைகளுக்கு சரியான நேரத்தில் ஆஜராக முடியாது. எனவே அவர்கள் மீது பாதகமான உத்தரவை பிறப்பிக்கக் கூடாது என நீதிமன்றங்களுக்கு உத்தரவிட வேண்டும் என்று அந்தக் கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.