டெல்லியில் அமித் ஷாவுடன் இபிஎஸ் ஆலோசனை

சென்னை: செப். 17-
டெல்லியில் மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவை அதிமுக பொதுச் செயலாளர் பழனிசாமி நேற்று சந்தித்தார். பசும்பொன் முத்துராமலிங்கத் தேவருக்கு பாரத ரத்னா விருது வழங்க வேண்டும் என்று வேண்டுகோள் விடுத்த பழனிசாமி, தமிழக அரசியல் நிலவரம் குறித்தும் தீவிர ஆலோசனை நடத்தியுள்ளார்.
தமிழகத்தில் அதிமுக, பாஜகவுடன் கூட்டணி அமைத்த நிலையில், முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வத்துக்கு பாஜக தலைமை உரிய முக்கியத்துவம் அளிக்கவில்லை. இதையடுத்து, பாஜக கூட்டணியை விட்டு வெளியேறியதாக ஓபிஎஸ் அறிவித்தார். முதல்வர் ஸ்டாலினை அவரது இல்லத்தில் சந்தித்து பரபரப்பை ஏற்படுத்தினார். ‘‘அரசியலில் யாரும் எதிரியும் இல்லை, நண்பரும் இல்லை” என்று இந்த சந்திப்பு குறித்து விளக்கம் அளித்தார் ஓபிஎஸ். நேற்று டெல்லி சென்ற அதிமுக பொதுச் செயலாளர் பழனிசாமி, இரவு 8 மணி அளவில் மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவை சந்திக்க சென்றார். அதிமுக துணை பொதுச் செயலாளர் கே.பி.முனுசாமி, பொருளாளர் திண்டுக்கல் சீனிவாசன், தலைமை நிலைய செயலாளர் எஸ்.பி.வேலுமணி, எம்.பி.க்கள் தம்பிதுரை, சி.வி.சண்முகம், இன்பதுரை, தனபால் ஆகியோரும் உடன் சென்றார். பின்னர் அமித் ஷாவும், பழனிசாமியும் தனியே கலந்துரையாடினர். இந்த சந்திப்பின்போது, “பசும்பொன் முத்துராமலிங்க தேவருக்கு பாரத ரத்னா விருது வழங்க வேண்டும்” என்று அமித் ஷாவிடம் பழனிசாமி கோரிக்கை விடுத்தார்.முன்னதாக, டெல்லியில் குடியரசு துணைத் தலைவராக பொறுப்பேற்றுள்ள தமிழகத்தை சேர்ந்த சி.பி.ராதாகிருஷ்ணனை சந்தித்து பழனிசாமி வாழ்த்து தெரிவித்தார்.