டெல்லியில் கம்பீரமாக வந்த குடவோலை முறை அலங்கார ஊர்தி

டெல்லி: ஜனவரி 26 – டெல்லியில் குடியரசு தின விழா அணிவகுப்பில் தமிழ்நாட்டின் சார்பில் அலங்கார ஊர்தியில் குடவோலை முறை காட்சிப்படுத்தப்பட்டது. கம்பீரமாக தமிழ் மொழியில் குடவோலை முறை குறித்த பாடல்களுடன், பாரம்பரிய முறைப்படியான வடிவமைப்புடன் இருந்த குடவோலை முறை அலங்காரம் பார்வையாளர்கள் ரசிக்கும் வகையில் இருந்தது.
இந்த முறை குடவோலை முறை என்பது மக்களாட்சி நடைபெறுவதற்கு அச்சாரம் போட்டது ஆகும். குடவோலை என்பது தமிழ்நாட்டில் சோழர்கள் ஆட்சி காலத்தில் நடை முறையில் இருந்த நிர்வாக சபை உறுப்பினரைத் தேர்ந்து எடுக்கப் பயன்பட்ட தேர்தல் முறையாகும். இந்த முறையில் கிராமத்தின் பகுதி வாரியாக மக்கள் கூடி, தகுதியான உறுப்பினர்கள் பெயர்களை ஓலைச்சுவடிகளில் எழுதி போடுவார்கள். பிறகு அதை மொத்தமாகக் கட்டி, ஒரு பானையில் போட்டு சிறு குழந்தைகளை வைத்து குலுக்கல் முறையில் தேர்ந்தெடுப்பார்கள். குற்றமற்றோரையும் தகுதியுள்ளோரையும் மட்டுமே தேர்தலில் நிற்கச் செய்து தேர்தல் நடந்திருக்கிறது.
இடைக்காலச் சோழர்களின் ஆட்சி காலத்தில் கி.பி. 9ம் நூற்றாண்டு முதல் கி.பி. 16ஆம் நூற்றாண்டு வரை இந்த குடவோலை முறை தேர்தல் நடைமுறையில் இருந்ததாக தகவல்கள் வெளியாகி உள்ளன. இதற்கான ஆதாரமாக கி.பி. 907 முதல் 955 வரை ஆண்ட மன்னன் முதலாம் பராந்தக சோழன் காலத்திற்கு உட்பட்ட மூன்று கல்வெட்டுகளும் உள்ளன. இதில் இரண்டு கல்வெட்டுகள் காஞ்சிபுரத்தின் அருகில் உள்ள உத்தரமேரூரிலும், மற்றொன்று தஞ்சைப் பள்ளிப்பாக்கம் கிராமத்திலும் கிடைத்திருக்கின்றன. குடவோலை தேர்தல் விதிமுறைகளையும், வேட்பாளர்களின் தகுதி மிகக் கடுமையான விதிகள் மூலம் நிர்ணயிக்கப்பட்டதை செங்கல்பட்டு மாவட்டத்தில் உள்ள உத்திரமேரூர் கல்வெட்டு தெரிவித்துள்ளார்.