டெல்லியில் காற்று மாசு அதிகரிப்பால் பள்ளிகளுக்கு 2 நாட்கள் விடுமுறை

புதுடெல்லி : நவம்பர். 3 – நகரில் அதிகரித்து வரும் மாசு அளவைக் கருத்தில் கொண்டு டெல்லியில் உள்ள அனைத்து அரசு மற்றும் தனியார் ஆரம்பப் பள்ளிகளுக்கு அடுத்த 2 நாட்களுக்கு விடுமுறை அளிக்கப்படுவதாக முதல்வர் கெஜ்ரிவால் நேற்றிரவு அறிவித்தார்.நடப்பு சீசனில் தேசிய தலைநகரில் காற்றின்தரம் நேற்று ‘கடுமை’ என்கிற பிரிவுக்கு நகர்ந்தது.அதோடு அடுத்த இரண்டு வாரங்களில் மேலும் இது மோசமடையக்கூடும் என்றும் நிபுணர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
நேற்றைய நாளில் காற்றின் தரக்குறியீடு 402 ஆக பதிவாகியிருந்தது. இது கடுமை பிரிவில் குறிக்கப்படுகிறது. டெல்லியில் உள்ள 37 கண்காணிப்பு நிலையங்களில் குறைந்தது 18 மையங்களில் காற்று தரக் குறியீடு அளவு “கடுமை” பிரிவில் நீடிப்பதாக பதிவு செய்துள்ளன. அதிலும் குறிப்பாக, 400-ஐ தாண்டிய பகுதிகளாக ஆனந்த் விகார், பவானா, புராரி கிராசிங், துவாரகா செக்டர் 8, ஜஹாங்கிர்புரி, முண்ட்கா, என்எஸ்ஐடி துவாரகா, நஜாப்கர், நரேலா, நேரு நகர், நியூ மோதி பாக், ஓக்லா கட்டம் 2, பட்பர்கஞ்ச், பஞ்சாபி பாக், ஆர் கே புரம், ரோகினி ,ஷாதிபூர் மற்றும் வசிர்பூர் பகுதிகளில் காற்றின் தரக்குறியீடு 400ஐ கடந்துள்ளது.
இதன் காரணமாக காற்றின் தரத்தை மேம்படுத்த கிரேடடு ரெஸ்பான்ஸ் திட்டத்தின் 3ம் நி்லை கட்டுப்பாடுகள் அமல்படுத்தப்பட்டுள்ளது. குறிப்பாக, கட்டுமானப்பணிகள் மற்றும் இடிப்பு நடவடிக்கைகளுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. இதன் தொடர்ச்சியாக, அரசு மற்றும் தனியார் ஆரம்பப் பள்ளிகளுக்கு அடுத்த இரு நாட்களுக்கு விடுமுறை விடப்பட்டுள்ளதாக முதல்வர் கெஜ்ரிவால் நேற்றிரவு அறிவித்தார். இதுபற்றி அவர் தனது எக்ஸ் சமூகவலைதள பக்கத்தில் பதிவிட்டுள்ள செய்தியில், அதிகரிக்கும் மாசு அளவைக் கருத்தில் கொண்டு, டெல்லியில் உள்ள அனைத்து அரசு மற்றும் தனியார் தொடக்கப் பள்ளிகள் அடுத்த 2 நாட்களுக்கு மூடப்படும்\” என்று முதல்வர் தெரிவித்துள்ளார்.