டெல்லியில் பள்ளிக்கு நவ.10 வரை விடுமுறை

புதுடெல்லி: நவ. 6
தலைநகர் டெல்லியில் காற்று மாசு அளவு மிக மோசமான நிலையை எட்டியுள்ளதால் தொடக்கப் பள்ளிகளுக்கு நவ.10-ம் தேதி வரை விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. டெல்லியில் வாகனங்கள் நுழையவும், கட்டுமான பணிகள் மேற்கொள்ளவும் தடை விதிக்கப்பட்டுள்ளது.
டெல்லியின் பல்வேறு பகுதிகளில் கடந்த சில வாரங்களாகவே காற்று மாசு அளவு மிக வேகமாக அதிகரித்து வருகிறது. இதனால், பலருக்கும் மூச்சுத் திணறல் உட்பட பல்வேறு உடல் உபாதைகள் ஏற்படத் தொடங்கியுள்ளன. இந்தநிலையில், மாணவர்கள் நலன்கருதி, டெல்லி முழுவதும் தொடக்கப் பள்ளிகளுக்கு நவ.10-ம் தேதி வரை விடுமுறை அறிவித்து மாநில அரசு உத்தரவிட்டுள்ளது.
இதுகுறித்து டெல்லி கல்வித் துறை அமைச்சர் அதிஷி கூறியபோது, ‘‘தலைநகர் டெல்லியில் காற்று மாசு அளவு தொடர்ந்து அதிகரித்து வருவதால், தொடக்கப் பள்ளிகளை நவ.10-ம் தேதி வரை மூடுமாறு உத்தரவிடப்பட்டுள்ளது. 6 முதல் 12-ம் வகுப்பு வரை பயிலும் மாணவர்களுக்கு ஆன்லைன் மூலம் வகுப்புகளை நடத்தஅறிவுறுத்தப்பட்டுள்ளது’’ என்றார்
முன்னதாக, டெல்லியில் காற்றுமாசு மோசமான அளவை எட்டியதை அடுத்து, அனைத்து அரசுமற்றும் தனியார் தொடக்கப் பள்ளிகளுக்கு கடந்த 3-ம் தேதி விடுமுறை விடப்படுவதாக முதல்வர் அர்விந்த் கேஜ்ரிவால் அறிவித்தார்.
இந்த சூழ்நிலையில், காற்று மாசு மேலும் கடுமையான அளவில் மோசமாகி ‘சிவியர் பிளஸ்’ என்ற நிலையை எட்டியதை தொடர்ந்து, பள்ளிகளுக்கு நவ.10வரை தொடர் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.