டெல்லியை நோக்கி மீண்டும் விவசாயிகள் பேரணி

டெல்லி: மார்ச் 6: ஒன்றிய அரசுக்கு எதிராக விவசாயிகளின் டெல்லி முற்றுகை போராட்டம் இன்று மீண்டும் தொடங்குகிறது. இதனால் டெல்லி எல்லைகளில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. வேளாண் விலை பொருட்களுக்கு குறைந்தபட்ச ஆதரவு விலை, பயிர்க்கடன் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி விவசாய சங்கங்கள் கடந்த மாதம் 13ம் தேதி டெல்லி நோக்கி பேரணியை தொடங்கினர்.
பஞ்சாப், ஹரியானா, உத்தரப்பிரதேசம் உள்ளிட்ட மாநிலங்களில் இருந்து ஆயிரக்கணக்கான டிராக்டர்களில் சென்ற விவசாயிகள் மீது துணை ராணுவம் மற்றும் போலீசார் கண்ணீர் புகைக்குண்டுகளை வீசியும், தடியடி நடத்தியும் பேரணியை தடுத்தனர். சம்பு பகுதியில் ரப்பர் குண்டு தாக்குதலில் இளம் விவசாயி ஒருவர் உயிரிழந்தார். இதையடுத்து போராட்டம் தற்காலிகமாக நிறுத்தப்பட்டது. இந்நிலையில் இன்று மீண்டும் டெல்லி நோக்கிய பேரணியை தொடங்க போவதாக விவசாயிகள் அறிவித்துள்ளனர்.
நாடு முழுவதும் உள்ள விவசாயிகள் பேருந்து, ரயில்களில் மூலமாக போராட்டக்களத்திற்கு வருமாறு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. இதனிடையே பேரணியை தொடங்குவதற்கு முன்னர் பஞ்சாப் விவசாயிகள் பொற்கோயிலில் வழிபாடு நடத்தினர். தங்களின் கோரிக்கைகளை வலியுறுத்தி வரும் 10ம் தேதி நாடு முழுவதும் நண்பகல் 12 மணி முதல் மாலை 4 மணி வரை ரயில் மறியலில் ஈடுபட போவதாவும் விவசாய சங்க பிரதிநிதிகள் அறிவித்துள்ளனர்.
விவசாயிகள் டிராக்டர்களில் பேரணி செல்ல தொடர்ந்து அனுமதி மறுத்து வரும் ஒன்றிய அரசு சாலைகளில் ஆணிகள் அடித்தும், கான்கிரீட் தடுப்புகளை அமைத்தும் எல்லையில் பாதுகாப்பை பலப்படுத்தியுள்ளது. விவசாயிகள் டெல்லிக்குள் நுழைவதை தடுக்க எல்லையில் ஏராளமான போலீசார் மற்றும் துணை ராணுவத்தினர் குவிக்கப்பட்டுள்ளனர்.