டெல்லி உள்ளிட்ட பல மாநிலங்களில் சுட்டெரிக்கும் வெயில்

சென்னை: மே 30:
பருவநிலை மாற்றம் காரணமாக அக்னி நட்சத்திரம் முடிந்துள்ள நிலையில், தமிழ்நாட்டில் மீண்டும் வெப்ப நிலை அதிகரித்துள்ளது. சென்னையில் நேற்று 107 டிகிரி வெயில் கொளுத்தியது. டெல்லியில் வரலாறு காணாத அளவுக்கு 127.22 டிகிரி கொளுத்தியது. நாடு முழுவதும் பல இடங்களில் வெப்ப அலை வீசியதால் மக்கள் தவித்தனர். வெயிலுக்கு பயந்து மக்கள் வெளியே வராததால் சாலைகள் வெறிச்சோடின.
பசிபிக் பெருங்கடல் மட்டத்தில் உருவாகியுள்ள எல்-நினோ காரணமாக இந்த ஆண்டு இந்தியா உள்பட பல்வேறு பகுதிகளில் வெப்ப நிலை அதிகரிக்கும் என்று வானிலை ஆய்வாளர்கள் கணித்து கூறினர். குறிப்பாக இந்தியாவில் குறைந்தபட்சம் 115 டிகிரி முதல் அதற்கும் அதிகமாக தகிக்க வாய்புள்ளது என்றும் நீண்ட கால வானிலை அறிவிப்பின் அடிப்படையில் தெரிவித்து இருந்தனர். அதற்கேற்ப, தமிழ்நாட்டில் கடந்த மார்ச் மாதம் முதலே கோடை வெயிலுக்கான அறிகுறிகள் தென்படத் தொடங்கின. இதற்கிடையே, தென்னிந்திய பகுதிகளின் மேல் வளி மண்டல கீழடுக்கு சுழற்சி உருவான காரணத்தால் ஏப்ரல் 15ம் தேதி முதல் டெல்டா மாவட்டங்களில் மழை பெய்யத் தொடங்கியது. இதனால் அந்த பகுதிகளில் மட்டும் வெப்பம் குறையத் தொடங்கியது. ஏப்ரல் 20ம் தேதிக்கு பிறகு மீண்டும் வெப்பநிலை அதிகரிக்கத் தொடங்கி வெப்ப அலை வீசியதுடன், 104 டிகிரி முதல் 109 டிகிரி வரை வெயில் கொளுத்தத் தொடங்கியது.
அது தொடர்ந்து நீடித்ததால் மஞ்சள் அலர்ட், ஆரஞ்சு அலர்ட் விடப்பட்டது. அதே நேரத்தில் ஏப்ரல் 25ம் தேதி தமிழ்நாட்டில் அதிகபட்சமாக வெப்ப நிலை 110 டிகிரியை தொட்டது. வட தமிழகத்தில் பெரும்பாலான மாவட்டங்களில் வெயில் சுட்டெரித்தது. மே 1 மற்றும் 2ம் தேதிகளில் தமிழ்நாட்டில் வேலூர் கரூர் மாவட்டங்களில் 111 டிகிரி வெயில் சுட்டெரிக்கத் தொடங்கியது. தென்மாவட்டங்கள் தவிர சென்னை உள்பட பல மாவட்டங்களில் வெயில் தாக்கம் அதிகமாக உள்ளது. கடந்த 4 நாட்களாக சென்னையில் 106 டிகிரி நீடித்து வருகிறது. பகல் 12 மணி முதல் 3 மணி வரை வேலை செய்ய தடை
டெல்லியில் கொளுத்தும் வெயில் காரணமாக பகல் 12 மணி முதல் மதியம் 3 மணி வரை கட்டுமானம் உள்ளிட்ட திறந்த வெளியில் நடக்கும் பணிகளுக்கு தடை விதித்து கவர்னர் சக்சேனா உத்தரவிட்டுள்ளார். டெல்லி வெப்ப நிலை 104 டிகிரியாக குறையும் வரை இந்த நிலை தொடரும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

கேரளாவில் இன்று பருவமழை தொடக்கம்
தென்தமிழக பகுதிகளின் மேல் ஒரு வளி மண்டல கீழடுக்கு சுழற்சி நீடித்து வருவதால், கேரளாவில் இன்று தென் மேற்கு பருவமழை காலம் கனமழையுடன் தொடங்கும் என்று வானிலை மையம் அறிவித்துள்ளது. வடகிழக்கு மாநிலங்களில் நாளை முதல் பருவ மழை தொடங்க உள்ளது. அத்துடன், தமிழ்நாட்டில் இன்றும் நாளையும் ஓரிரு இடங்களில் கனமழை பெய்யும். ஜூன் 1, 2ம் தேதிகளில் கிருஷ்ணகிரி, தர்மபுரி, திருப்பத்தூர், சேலம், ஈரோடு, நீலகிரி, கோவை மாவட்ட மலைப் பகுதிகள், திருச்சி மற்றும் நாமக்கல் மாவட்டங்்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்யும்.

குளுகுளு மாநிலங்களிலும் வரலாறு காணாத வெயில்
அசாம், அருணாச்சல் உள்ளிட்ட எப்போதும் குளுமை நிறைந்து இருக்கும் மாநிலங்களில் கூட இந்த ஆண்டு வரலாறு காணாத வெயில் பதிவாகி உள்ளது. இமாச்சலபிரதேச மாநிலத்தில் கூட முதன்முறையாக 115 டிகிரியை தாண்டி வெயில் பதிவாகி உள்ளது. அங்குள்ள உனா நகரில் இருக்கும் நெரி பகுதியில் 115.34 டிகிரி நேற்று பதிவாகி உள்ளது. இது 19 ஆண்டுகளில் மிகவும் அதிபட்சமாகும். அதே போல் எப்போதும் குளுகுளு வானிலை நிலவும் சிம்லாவில் இதுவரை இல்லாத அளவுக்கு 89.06 டிகிரி பதிவாகி உள்ளது. தர்மசாலா, மணாலியிலும் இதே நிலை தான் நீடிக்கிறது. காஷ்மீரில் கூட 112.64 டிகிரி பதிவாகி அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. ஜம்முவில் தான் இந்த அளவு பதிவானது. வழக்கமான அளவை விட அங்கு 42.26 டிகிரி கூடுதலாக பதிவாகி உள்ளதால் ஜம்முவிலும் அனல் பறக்கிறது. வைஷ்ணவி தேவி கோயில் அமைந்துள்ள கட்ரா பகுதியில் 104 டிகிரி பதிவானது. அதே சமயம் கதுவாவில் அதிகபட்சமாக 114.98 டிகிரியும், சம்பாவில் 112.46 டிகிரியும், ஸ்ரீநகரில் 90.68 டிகிரியும் பதிவானது. லே நகரில் மட்டும் குறைந்தபட்சமாக 69 டிகிரி பதிவானது.

  • டெல்லியில் 127.22 டிகிரி பதிவானது உண்மையா?
  • டெல்லியின் முங்கேஷ்பூரில் உள்ள தானியங்கி வானிலை மையத்தில் நேற்று 127.22 டிகிரி வெப்ப நிலை பதிவானது சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது. அங்கு உள்ள வெப்பநிலை சென்சார் சரியாக வேலை செய்கிறதா என்பதை சரிபார்க்க வேண்டும் என்று இந்திய வானிலை மைய இயக்குநர் ஜெனரல் ெமாஹபத்ரா. தெரிவித்துள்ளார். இந்திய வானிலை ைமயம் வெளியிட்டுள்ள அறிக்கையில்,’ டெல்லி மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் 113 டிகிாி முதல் 120.38 டிகிரி வரை பதிவாகி இருக்கிறது. ஆனால் முங்கேஷ்பூரில் 127.22 டிகிரி பதிவாகி உள்ளது. இது சென்சார் பிழை அல்லது உள்ளூர் சூழல் காரணமாக இருக்கலாம். இதுதொடர்பாக ஆய்வு நடக்கிறது’ என்று தெரிவித்துள்ளது. ஒன்றிய புவி அறிவியல் அமைச்சர் கிரண் ரிஜிஜு, ‘டெல்லி முங்கேஷ்பூரில் பதிவான வெயில் அளவு இன்னும் அதிகாரப்பூர்வமாக இல்லை. அந்த வெயில் அளவை சரிபார்க்கும் நடவடிக்கையில் அதிகாரிகள் ஈடுபட்டுள்ளனர். அதிகாரப்பூர்வ நிலை விரைவில் தெரிவிக்கப்படும்’ என்றார்