டெல்லி தீ விபத்து; கட்டிட உரிமையாளர்களின் தந்தை உயிரிழந்த சோகம்

புதுடெல்லி,மே.14-
டெல்லியின் முண்ட்கா மெட்ரோ ரெயில் நிலையம் அருகே 4 மாடி வணிக கட்டிடம் ஒன்றில் நேற்று மாலை திடீரென தீ விபத்து ஏற்பட்டது. இந்த தீ விபத்தில் இதுவரை மொத்தம் 27 பேர் உயிரிழந்து உள்ளனர். 12 பேர் காயமடைந்து உள்ளனர். 50 பேர் வரை மீட்கப்பட்டுள்ளனர்.கட்டிடத்திற்குள் பலர் சிக்கியுள்ளனர். இதனால், உயிரிழப்பு அதிகரிக்கும் என்று அஞ்சப்படுகிறது. டெல்லி தீ விபத்தில் இதுவரை 27 உடல்கள் மீட்கப்பட்டுள்ளன என டெல்லி சுகாதார துறை மந்திரி சத்யேந்தர் ஜெயின் உறுதிப்படுத்தி உள்ளார்.
தீ விபத்தில் உயிரிழந்த குடும்பங்களுக்கு பிரதமர் நிவாரண நிதியிலிருந்து தலா ரூ.2 லட்சமும், காயமடைந்தவர்களுக்கு ரூ.50 ஆயிரமும் வழங்கப்படும் என்று பிரதமர் மோடி அறிவித்துள்ளார்.
டெல்லியில் 4 அடுக்கு கட்டிடத்தில் தீ விபத்து ஏற்பட்ட சம்பவத்திற்கு முதல்-மந்திரி கெஜ்ரிவால் வேதனை தெரிவித்து உள்ளார்.
கட்டிடத்தில் இருந்து வெளியேற ஒரே ஒரு வழி தவிர, வேறு வழிகள் இல்லாதது உயிரிழப்பு அதிகரிக்க காரணம் என கூறப்படுகிறது. 28 பேரை காணவில்லை என புகார் அளிக்கப்பட்டு உள்ளது. மீட்பு பணி தொடருகிறது. இதுபற்றி அதிகாரிகள் மட்டத்தில் தொடர்ந்து விசாரணை நடந்து வருகிறது.டெல்லி தீ விபத்தில் கட்டிட உரிமையாளர்களான வருண் கோயல் மற்றும் சதீஷ் கோயல் ஆகிய இருவரையும் போலீசார் கைது செய்துள்ளனர். கட்டிடத்தில் தொழிற்சாலை செயல்படுவதற்கு தீயணைப்பு துறையிடம் இருந்து தடையில்லா சான்றிதழை அவர்கள் வாங்கவில்லை என கூறப்படுகிறது.

தேவையான ஆவணங்கள் இன்றி செயல்பட்டு வந்துள்ளது என தெரிய வந்துள்ளது. இந்த சம்பவம் நடந்தபோது, கட்டிடத்தின் முதல் தளத்தில் அவர்களின் தந்தை அமர்நாத் கோயல் இருந்துள்ளார்.

அவர் ஊக்கமளிக்கும் கூட்டம் ஒன்றில் பங்கேற்று இருந்துள்ளார். தீ விபத்து ஏற்பட்டதும், அதில் சிக்கி கொண்ட அவரால் வெளியே வரமுடியவில்லை. இந்த தீ விபத்தில் கட்டிட உரிமையாளர்களான கோயல் சகோதரர்களின் தந்தை உயிரிழந்துள்ளார்.

அவரது உடல் உள்ளூர் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டது. அவர் இன்று காலை அடையாளம் காணப்பட்டு உள்ளார்.