டெல்லி நீதிமன்றத்தில் அரவிந்த் கெஜ்ரிவால் காணொலி மூலம் ஆஜர்

டெல்லி: பிப். 17: வி சாரணைக்கு ஆஜராகாமல் இருந்து டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு எதிராக டெல்லி ரோஸ் அவென்யூ நீதிமன்றத்தில் அமலாக்கத்துறை வழக்கு தொடர்ந்தது. இந்த வழக்கில், அரவிந்த் கெஜ்ரிவால் காணொலி வாயிலாக நீதிமன்றத்தில் ஆஜரானார்.
டெல்லியில் ஆம்ஆத்மி கட்சியின் ஆட்சி நடந்து வருகிறது. முதல்வராக அந்த கட்சியின் அரவிந்த் கெஜ்ரிவால் உள்ளார். ஊழலுக்கு எதிராக தொடங்கப்பட்ட கட்சியான ஆம் ஆத்மி மீது தற்போது பல்வேறு ஊழல் புகார்கள் முன்வைக்கப்பட்டுள்ளது. குறிப்பாக டெல்லி புதிய மதுபான கொள்கையை வகுத்து செயல்படுத்தியதில் மிகப்பெரிய அளவில் ஊழல் நடந்துள்ளதாக பாஜக குற்றம்சாட்டியது.
இதுதொடர்பாக சிபிஐ விசாரித்த நிலையில் சட்ட விரோத பணப்பரிமாற்றம் நடந்தது தெரியவந்தது. இதையடுத்து அமலாக்கத்துறையும் இந்த வழக்கை கையில் எடுத்தது. தொடர்ந்து அமலாக்கத்துறை இந்த வழக்கில் விசாரணையை தொடங்கியது. இதன் பின்னர் இந்த வழக்கில் டெல்லி துணை முதல்வராக இருந்த மணிஷ் சிசோடியா கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.
மேலும் அரவிந்த் கெஜ்ரிவாலிடம் சிபிஐ அதிகாரிகள் விசாரணை நடத்தி உள்ளனர். அமலாக்கத்துறை விசாரணைக்கு அழைத்த நிலையில் கெஜ்ரிவால் ஆஜராகாமல் உள்ளார். அமலாக்கத்துறை சார்பில் 5 முறை விசாரணைக்கு அழைத்து சம்மன் அனுப்பியும் கெஜ்ரிவால் அதனை புறக்கணித்து விசாரணைக்கு ஆஜராகாமல் உள்ளார். தேர்தலுக்கு முன்பாக தனது செயல்பாட்டை முடக்குவதே பாஜகவின் நோக்கம் எனவும் இதற்காக அமலாக்கத்துறை மூலம் தன்னையும், தனது கட்சியையும் காலி செய்ய பாஜக திட்டமிட்டுள்ளது என்றும் குற்றம் சாட்டி வருகிறார். அமலாக்கத்துறை 6-வது முறையாக கெஜ்ரிவாலுக்கு சம்மன் அனுப்பியுள்ளது. வரும் 19 ஆம் தேதி ஆஜராக வேண்டும் என சம்மன் அனுப்பப்பட்டுள்ளது.
இதற்கிடையே, அரவிந்த் கெஜ்ரிவால் விசாரணைக்கு ஒத்துழைக்க மறுப்பதாக டெல்லி நீதிமன்றத்தில் அமலாக்கத்துறை வழக்கு தொடர்ந்தது. இந்த வழக்கை விசாரித்த டெல்லி ரூஸ் அவென்யூ நீதிமன்றம், கெஜ்ரிவால் இன்று நீதிமன்றத்தில் ஆஜராக சம்மன் அனுப்பியது. இந்த உத்தரவை பிறப்பித்த நீதிபதி திவ்யா மல்கோத்ரா, பிப்ரவரி 17 ம் தேதி நீதிமன்றத்தில் அரவிந்த் கெஜ்ரிவால் ஆஜராகி அமலாக்கத்துறை விசாரணையை புறக்கணித்தது ஏன்? என்பது பற்றி விளக்கம் அளிக்க வேண்டும் என நீதிபதி உத்தரவிட்டார்.
இந்த நிலையின், நீதிமன்றத்தின் சம்மனை ஏற்று அரவிந்த் கெஜ்ரிவால் இன்று காணொலி வாயிலாக ஆஜர் ஆனார். அப்போது வழக்கை விசாரித்த நீதிபதி, வழக்கின் விசாரணையை அடுத்த மாதம் 16 ஆம் தேதிக்கு ஒத்தி வைத்து உத்தரவிட்டார்.