டெல்லி மந்திரி மிரட்டுவதாக சிறை அதிகாரிகள் புகார்

புதுடெல்லி, ஜன.6
டெல்லி மந்திரி சத்யேந்தர் ஜெயின், சட்டவிரோத பண பரிமாற்ற தடை வழக்கில் கடந்த ஆண்டு அமலாக்கத்துறையால் கைது செய்யப்பட்டார். அப்போதிருந்து டெல்லி திகார் சிறையில் இருந்து வருகிறார். சிறையில் அவர் மசாஜ் செய்து கொள்வதும், வெளி உணவை சாப்பிடுவதும் வீடியோவாக வெளியாகி பரபரப்பு ஏற்படுத்தியது. இந்தநிலையில், சத்யேந்தர் ஜெயின் மீது திகார் சிறை கூடுதல் ஐ.ஜி., சிறை சூப்பிரண்டு, துணை சூப்பிரண்டு, உதவி சூப்பிரண்டு, சட்ட அதிகாரி ஆகியோர் டி.ஜி.பி.யிடம் (சிறைகள்) புகார் தெரிவித்துள்ளனர். அதில், ‘’சத்யேந்தர் ஜெயின் அனுபவிக்கும் வசதிகளை நாங்கள் தடுக்க முயற்சிப்பதால் அவர் எங்களை வசை பாடுகிறார். ‘நான் வெளியே வந்த பிறகு கடுமையான பின்விளைவுகளை சந்திப்பீர்கள்’ என்று மிரட்டுகிறார்’’ என்று அவர்கள் கூறியுள்ளனர். இதுபோல், நோட்டீஸ் கொடுக்க சென்ற தங்களை சத்யேந்தர் ஜெயின் மிரட்டியதாக 2 அதிகாரிகள் புகார் செய்துள்ளனர். இதுகுறித்து ஆம் ஆத்மி தரப்போ, டெல்லி அரசு தரப்போ எதுவும் கூறவில்லை.