டெல்லி மெட்ரோ ரயில் நிலைய சுவர்களில் காலிஸ்தான் ஆதரவு வாசகம்

புதுடெல்லி: மே. 13 டெல்லி மெட்ரோ ரயில் நிலைய சுவர்களில் காலிஸ்தான் அமைப்புக்கு ஆதரவாகவும், பிரதமர் மோடிக்கு எதிராகவும் எழுதப்பட்ட வாசகங்களை டெல்லி போலீஸார் அழித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
அமெரிக்காவில் வசிக்கும் காலிஸ்தான் தீவிரவாதி குர்பத்வந்த் சிங் பன்னுன். இவர் நீதிக்கான சீக்கியர்கள் (எஸ்எப்ஜே) என்ற அமைப்பை நடத்துகிறார். இந்தியாவில் சீக்கியர்களுக்கு தனியாக காலிஸ்தான் என்ற பகுதியை உருவாக்க வேண்டும் என இந்த அமைப்பினர் பிரச்சாரம் செய்து வருகின்றனர். இவர்கள் சட்டவிரோத நடவடிக்கைகளில் ஈடுபடுவதால் இந்த அமைப்புக்கு மத்திய அரசு தடை விதித்துள்ளது.
கடந்த டிசம்பர் 13-ம் தேதி, நாடாளுமன்ற தாக்குதல் நினைவு தினத்தில், நாடாளுமன்றத்தில் தாக்குதல் நடத்தப்போவதாக குர்பத்வந்த் சிங் பன்னுன் வீடியோ வெளியிட்டிருந்தார். அதன்பின் 75-வது குடியரசு தினவிழாவை முன்னிட்டு டெல்லியில் காலிஸ்தான் கொடி ஏற்றப்படும் என பன்னுன் கூறியிருந்தார். இதையடுத்து டெல்லி உத்தம் நகரில் உள்ள அரசு பள்ளியின் சுற்றுச் சுவரில் காலிஸ்தான் ஆதரவு வாசகங்கள் கடந்த ஜனவரியில் எழுதப்பட்டிருந்தன.
இந்நிலையில் டெல்லி கரோல் பாக், ஜந்தேவாலன் மெட்ரோ ரயில்நிலையங்களின் சுவற்றில் காலிஸ்தானுக்கு ஆதரவாகவும், பிரதமர் மோடிக்கு எதிராகவும் வாசகங்கள் எழுதப்பட்டிருந்தன. அவற்றை டெல்லி போலீஸார் அழித்து, வழக்குப்பதிவு செய்துள்ளனர். இதை எழுதியவர்களை கண்டுபிடிக்க சிசிடிவி வீடியோ காட்சிகளை மெட்ரோ ரயில் நிலையங்களில் இருந்து போலீஸார் கேட்டுள்ளனர்.