தங்கதுகள் கடத்தல் – பெங்களூரு விமான நிலையத்தில் சவுதி பயணி கைது

பெங்களூரு, பிப்.1: தங்க துகள் கடத்தியதற்காக பெங்களூரு விமான நிலையத்தில் சவுதி பயணி கைது செய்யப்பட்டார்.
பெங்களூரு கெம்பேகவுடா சர்வதேச விமான நிலையத்தில் (கேஐஏ) ரூ.7.52 லட்சம் மதிப்புள்ள தங்கத் துகள்க‌ளை பயணி ஒருவர் பிளாஸ்கின் உட்புறத்தில் ஒட்டி மறைத்து வைத்து, கடத்திச் செல்ல‌ முயன்றதை பெங்களூரு சுங்கத்துறையினர் முறியடித்துள்ளனர்.
இச்சம்பவம் ஜனவரி 28 அன்று நடந்துள்ளது. சவுதி அரேபியாவின் ஜெட்டாவிலிருந்து வந்த பயணி ஒருவர் 122.22 கிராம் தங்கத்தை கடத்த முயன்றதாக சுங்க அதிகாரிகள் தெரிவித்தனர். அவரை சோதனை செய்த சுங்கத்துறையினர் ரூ. 7.52 லட்சம் மதிப்புள்ள தங்கத் துகள்களை பறிமுதல் செய்துள்ளனர்.
சோதனையில், ஆண் பயணி, தங்கத் தூளை மெழுகுடன் கலந்து குடுவையின் உட்புறத்தில் ஒட்டி மறைத்து வைத்திருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இதையடுத்து அவரை கைது செய்த சுங்கத்துறை அதிகாரிகள், பெங்களூரு சர்வதேச விமான நிலையக் காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர். அவரிடம் போலீசார் தொடர்ந்து விசாரணை செய்து வருகின்றனர்