தங்க முலாம் பூசிய லட்டுரூ.24.60 லட்சத்திற்கு ஏலம்

திருப்பதி, செப்.10 – ஐதராபாத்தை அடுத்துள்ள பாலாபூரில் உள்ள விநாயகர் கோவிலில் விநாயகர் சதுர்த்தி விழாவின் நிறைவு நாளில், பிரசாதமாக 21 கிலோவில் லட்டு செய்து விநாயகருக்குப் படைப்பது வழக்கம். சுத்தமான நெய், உலர் பழங்களைச் சேர்த்துச் செய்யப்பட்ட லட்டின் மேலே தங்க முலாம் பூசப்பட்டு, வெள்ளிக் கிண்ணத்தில் வைத்து விநாயகருக்கு நைவேத்தியம் செய்கிறார்கள். பின்னர், அந்த லட்டு ஏலம் விடப்படும். அந்தப் பகுதி மக்களுக்கு இந்த லட்டு பிரசாதத்தைச் சாப்பிட்டால் வளமாக வாழலாம் என்ற நம்பிக்கையிருப்பதால், இந்த லட்டை ஏலம் எடுப்பதற்குப் பக்தர்கள் இடையே கடும் போட்டி நிலவுகிறது. 1994-லிருந்து பாலாபூர் விநாயகர் கோவிலில் இந்த லட்டு ஏலம் நடைபெற்று வருகிறது. முதல் ஏலத்தை 450 ரூபாய்க்கு எடுத்த கோலனு மோகன் ரெட்டி, தொடர்ந்து 5 வருடங்கள் இந்த லட்டு ஏலத்தில் வெற்றி பெற்றிருக்கிறார். அதன் பிறகு, அவர் செழிப்பாக வாழத் தொடங்கியதால், பாலாபூர் மக்களிடையே லட்டும் ஏலமும் பிரசித்தி பெற்றுவிட்டது. ஒவ்வொரு வருடமும் அரசியல்வாதிகள், தொழிலதிபர்கள் என ஒருவருக்கொருவர் போட்டியிட்டு அதிக ஏலத்துக்கு எடுக்க ஆரம்பித்துவிட்டார்கள். இந்த ஆண்டும் பாலாப்பூர் விநாயகர் கோவிலில் தங்க முலாம் பூசப்பட்ட லட்டு தயார் செய்யப்பட்டு விநாயகருக்கு படைக்கப்பட்டது. நேற்று விநாயகர் சிலை ஊர்வலம் தொடங்கியதும் லட்டு பிரசாதம் ஏலம் விடப்பட்டது. முதலில் ரூ.1,116 என ஏலம் தொடங்கியது. இறுதியில் கணேஷ் உற்சவர் கமிட்டி உறுப்பினரான லட்சுமி ரெட்டி என்பவர் அந்த லட்டு பிரசாதத்தை ரூ.24.60 லட்சத்திற்கு ஏலம் எடுத்தார். அப்போது அமைச்சர்கள் சபிதா இந்திரா ரெட்டி, தல சானி ஸ்ரீநிவாஸ் யாதவ் உள்பட பலர் பங்கேற்றனர். கடந்த ஆண்டு இந்த கோவிலில் விநாயகருக்கு படைக்கப்பட்ட தங்க முலாம் பூசப்பட்ட லட்டு ரூ.18.90 லட்சத்துக்கு ஏலம் போனது.