தண்டவாளம் அருகே காதலர் சடலங்கள் மீட்பு

பெங்களூர் : நவம்பர். 24 – சிக்கபானவாரா மற்றும் ஹுஸ்கூரு கிராமத்தின் இடையே ரயில் தண்டவாளத்தின் அருகில் சந்தேகத்திற்கிடமான வகையில் காதலர்கள் இருவரின் உடல்கள் கண்டெடுக்கப்பட்டுள்ளது . இதில் இறந்த இளைஞனின் பெயர் நாகேந்திரா (21) என அடையாளம் காணப்பட்டுள்ளது. ஆனால் இவனுடன் சேர்ந்து கிடைத்துள்ள இளம் பெண்ணின் உடல் குறித்த விவரங்கள் தெரிய வர வில்லை. சிக்கபானவாரா மற்றும் கொல்லஹள்ளி ரயில் நிலையங்களின் இடையில் உள்ள ஹுஸ்கூரு கிராமத்தின் ரயில் நிலையத்தில் இவ்விருவரின் உடல் கண்டெடுக்கப்பட்டுள்ளது . ஒருவருக்கொருவர் மிக தீவிரமாக காதலித்து வந்துள்ள இவர்கள் இருவரும் தங்கள் வீடுகளை விட்டு வெளியே வந்து திருமணமும் செய்துகொண்டிருந்தனர் என தெரிய வந்துள்ளது. தற்போது இவர்களின் இருவரின் உடலும் சந்தேகத்துக்கிடமான வகையில் கண்டெடுக்கப்பட்டுள்ள நிலையில் ஓடும் ரயிலில் தலை கொடுத்து இருவரும் தற்கொலை செய்துகொண்டுள்ளதாக சந்தேகம் வலுத்துள்ளது. இது குறித்து தகவல் அறிந்த உடனேயே எசவந்தபுரம் ரயில்வே போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து மேற்பார்வையிட்டு வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.