தண்டவாள குண்டு வெடிப்பு; பயங்கரவாத செயல்- விசாரணையில் அம்பலம்

உதய்பூர் , நவ.16-
ராஜஸ்தானில் உதய்பூர் மற்றும் ஆமதாபாத் இடையே புதிய ரெயில் பாதை அமைக்கப்பட்டுள்ளது. இந்த பாதையை பிரதமர் நரேந்திர மோடி கடந்த அக்டோபர் 31ஆம் தேதி திறந்து வைத்தார். நேரடி இணைப்பு மூலம் பயண நேரம் 10 மணி நேரத்திலிருந்து 5 மணி நேரமாக குறைந்துள்ளது. இந்த நிலையில், உதய்பூர்-அசர்வா இன்டர்சிட்டி எக்ஸ்பிரஸ் ரெயில் புறப்பட்ட 90 நிமிடங்களுக்குப் பிறகு, ஜோவார் மற்றும் கர்வா சந்தா இடையே உள்ள பாலத்தில் திடீரென பயங்கர சத்தத்துடன் வெடிவிபத்து ஏற்பட்டது. வடமேற்கு ரெயில்வே மண்டலத்தின் கீழ் வரும், உதய்பூர் மாவட்டத்தில் உள்ள ஜோவார் மற்றும் கர்வா சந்தா ரெயில் பாலத்தில் கடந்த ஞாயிற்றுக்கிழமை அதிகாலையில் இந்த வெடி விபத்து ஏற்பட்டது.இந்த பாலத்தை அடையாளம் தெரியாத மர்ம நபர்கள் தகர்க்க முயன்றதாக கூறப்படுகிறது. ​​பல இடங்களில் ரெயில் தண்டவாளம் உடைந்து காணப்பட்டது. ரெயில் பாதையில் வெடிமருந்து கண்டெடுக்கப்பட்டது. 13 நாட்களுக்கு முன்பு பிரதமர் நரேந்திர மோடியால் திறந்து வைக்கப்பட்ட உதய்பூர்-ஆமதாபாத் ரெயில் பாதையில் கட்டப்பட்ட ரெயில் பாலத்தில் பெரும் வெடிவிபத்து ஏற்பட்ட சம்பவம் சுற்றுவட்டார மக்களிடையே பீதியை ஏற்படுத்தியது. போலீசாரின் விசாரணையில், இதற்கு டெட்டனேட்டர் பயன்படுத்தப்பட்டது தெரிய வந்துள்ளது. சம்பவ இடத்துக்குச் சென்ற பயங்கரவாதம் தடுப்புப்படையினர்(ஏடிஎஸ்), டெட்டனேட்டர் உள்ளிட்ட சில பொருட்களை கைப்பற்றினர். இதையடுத்து பயங்கரவாத கோணத்தில் நடத்திய விசாரணையில் திடுக்கிடும் தகவல் வெளியாகி உள்ளது. மிகப்பெரிய விபத்தை ஏற்படுத்த வேண்டும் என்ற நோக்கத்தில் ரயில் தண்டவாளத்தை தகர்த்துள்ளது விசாரணையில் தெரியவந்துள்ளது. மேலும் இந்த சதித் திட்டத்துக்கு பாகிஸ்தானின் ஐஎஸ்ஐ அமைப்புக்கு தொடர்பு இருப்பதும் தெரியவந்துள்ளது. இதுகுறித்து போலீஸார் வழக்கு பதிவு செய்து விசாரிக்கின்றனர்.