தண்ணீர் டேங்கர் விலை நிர்ணயம் அமல்படுத்துவது சாத்தியமா?

பெங்களூரு, மார்ச் 8: அதிக கட்டணம் வசூலிப்பதைத் தடுக்க, தண்ணீர் டேங்கர் விலையை கட்டுப்படுத்தும் அரசின் நடவடிக்கை, தண்ணீருக்கான அதிகரித்த செலவினங்களைச் சுமக்க போராடும் பொதுமக்களுக்கு நிவாரணமாக உள்ளது. இருப்பினும், இந்த உத்தரவு 10 கிலோமீட்டர் சுற்றளவில் உள்ள டேங்கர்களின் சப்ளைக்கு மட்டுமே விலை நிர்ணயம் செய்துள்ளது மற்றும் 10 கிமீக்கு அப்பால் உள்ள பகுதிகளுக்கு சப்ளை செய்பவர்களுக்கு இது எவ்வாறு பொருந்தும் என்பது குறித்து எந்த தெளிவும் இல்லை.
பெங்களூருவில் தண்ணீரின் புதிய விலை நிர்ணயம் 5 கி.மீ தூரத்திற்கு கீழ் நீர் விநியோகம் செய்யப்பட்டால், 10,000 லிட்டர் டேங்கருக்கு ரூ.1000 வரை வசூலிக்க வேண்டும். 5 கிமீ முதல் 10 கிமீ வரையிலான நீர் விநியோகப் பகுதி என்றால், 10,000 லிட்டர் டேங்கருக்கு ரூ.1,200 வரை வசூலிக்க வேண்டும் என்று விலை நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.
இது குறித்து பேசிய பல தண்ணீர் டேங்கர் சப்ளையர்கள் விலை நிர்ணயம் நடைமுறையில் இல்லை என்றும் நஷ்டத்தையே ஏற்படுத்தும் என்றனர்.
ஒரு பயணத்திற்கு தண்ணீர் நிரப்ப ஒரு வழியில் 20 கி.மீ. செல்ல வேண்டும். அதாவது ஒவ்வொரு முறையும் சப்ளை செய்ய 40 கி.மீ.க்கு அருகில் பயணிப்பேன். டீசல் செலவு, தண்ணீர் நிரப்பும் செலவு மற்றும் ஓட்டுநர் கட்டணம் ரூ.1,800 முதல் ரூ.2,000 வரை இருக்கும். இப்படி இருக்கும்போது, ​​1,200 ரூபாய்க்கு தண்ணீர் டேங்கரை எப்படி வழங்குவது என தொட்டனேக்குந்தியைச் சேர்ந்த டேங்கர் சப்ளைய‌ர்கள் தெரிவித்தனர்.
பெங்களூரு துணை கமிஷனர் கே.ஏ. தயானந்தா, தொழில்நுட்பக் குழு கட்டணங்களை மறுமதிப்பீடு செய்து, தேவைப்பட்டால், 10 கிமீக்கு மேல் கேப்பிங் செய்யும் என்றார். தற்போதைக்கு, குழு பெற்ற கோரிக்கைகள் மற்றும் பகுப்பாய்வு அடிப்படையில் அறிக்கையை வழங்கியுள்ளது. தொலைவில் இருந்து தண்ணீர் கொண்டு செல்ல வேண்டும் என்று கோரிக்கைகள் இருந்தால், 10 கி.மீ.க்கு அப்பால் உள்ளவற்றுக்கும் குழு மறுமதிப்பீடு செய்து விலை நிர்ணயம் செய்யும் என்றார்.
அதுமட்டுமின்றி, விலை வரம்பை அமலாக்குவது குறித்தும் பொதுமக்கள் கவலை தெரிவித்தனர். டேங்கர்கள் அதிக கட்டணம் வசூலித்தால் பிபிஎம்பி அல்லது பிடபள்யூஎஸ்எஸ்பி ஹெல்ப்லைனை அழைக்கலாம் என்று பெங்களூரு நீர் வழங்கல் மற்றும் கழிவுநீர் வாரியம் (BWSSB) தெரிவித்துள்ளது.
நாங்கள் கூட்டாக இந்த முடிவை அமல்படுத்துவோம். பொதுமக்கள் பிபிஎம்பி அல்லது பிடபள்யூஎஸ்எஸ்பி, வார்டு அல்லது மண்டல அதிகாரிகளை அணுகலாம். அவர்களும் எங்கள் ஹெல்ப்லைனில் புகார் தெரிவிக்கலாம். நாங்கள் உடனடியாக ஆய்வு செய்து நடவடிக்கை எடுப்போம் என்று பிடபள்யூஎஸ்எஸ்பி தலைவர் டாக்டர் ராம்பிரசாத் மனோகர் தெரிவித்தார்.“இப்போது, ​​எனக்கு தண்ணீர் வேண்டும். அதுதான் உடனடித் தேவை. ஒரு குறிப்பிட்ட தொகையை செலுத்தினால் மட்டுமே தண்ணீர் வழங்குவேன் என்று தண்ணீர் டேங்கர் சப்ளையர் சொன்னால், செலுத்துவதைத் தவிர வேறு வழியில்லை. என்னால் புகார் அளித்து உட்கார்ந்து காத்திருக்க முடியாது. இது தொடர்பாக அரசு ஆய்வு செய்ய வேண்டும் என்றார் ஆந்திரஹள்ளியில் வசிக்கும் சுமித்ரா.பிபிஎம்பி வரம்பிற்குட்பட்ட பகுதிகளில் சுமார் 3500 தண்ணீர் டேங்கர்கள் உள்ளன எனக் கூறப்பட்டு வரும் நிலையில் இதுவரை 1391 டேங்கர் சப்ளையர்கள் மட்டுமே பதிவு செய்துள்ளனர்.