தண்ணீர் திறக்க கர்நாடகாவுக்கு உத்தரவு

புதுடெல்லி: ஆக. 12
காவிரி மேலாண்மை ஆணைய கூட்டத்தில், நிலுவையில் உள்ள 37.9 டிஎம்சி நீரை திறந்துவிடக்கோரிய‌ தமிழகத்தின் கோரிக்கையை கர்நாடகா ஏற்க மறுத்ததால் தமிழக நீர்வளத் துறை செயலர் சந்தீப் சக்சேனா உள்ளிட்ட அதிகாரிகள் வெளிநடப்பு செய்தனர். உச்ச நீதிமன்ற உத்தரவின்படி, காவிரியில் தமிழகத்துக்கு வழங்க வேண்டிய நீரை கர்நாடகா உடனடியாக திறந்துவிட வேண்டும் என்று ஆணையத்தின் தலைவர் எஸ்.கே.ஹல்தர் உத்தரவிட்டுள்ளார்.
கர்நாடகாவில் காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் இந்த ஆண்டில் தென்மேற்கு பருவமழை தாமதமாக பொழிந்தது. போதிய அளவில் மழை பொழியாததால், தமிழகத்துக்கு வழங்க வேண்டிய நீரை கர்நாடக அரசு முறையாக வழங்கவில்லை. இதனால் மத்திய நீர்வளத் துறை அமைச்சர் கஜேந்திர சிங் ஷெகாவத்துக்கு தமிழகமுதல்வர் ஸ்டாலின் கடிதம்எழுதினார்.
அதில், ‘உச்ச நீதிமன்றஇறுதி உத்தரவின்படி தமிழகத்துக்கு வழங்க வேண்டிய நீரை திறந்துவிட, கர்நாடகாவுக்கு உத்தரவிட வேண்டும்’ என்று வலியுறுத்தினார். தமிழக நீர்வளத் துறை அமைச்சர் துரைமுருகனும் ஷெகாவத்தை சந்தித்து இதுகுறித்து வலியுறுத்தினார்.
இந்நிலையில், டெல்லியில் காவிரி மேலாண்மை ஆணையத்தின் 22-வது கூட்டம் அதன் தலைவர் எஸ்.கே.ஹல்தர் தலைமையில் நேற்று பிற்பகல் நடைபெற்ற‌து.
இதில் தமிழக நீர்வளத் துறை செயலர் சந்தீப் சக்சேனா, காவிரி தொழில்நுட்ப குழு உறுப்பினர்கள், கேரள மாநில நீர்வளத் துறை அதிகாரிகள் நேரில் கலந்துகொண்டனர். கர்நாடகா, புதுச்சேரி ஆகிய மாநிலங்களை சேர்ந்த நீர்வளத் துறை அதிகாரிகள் இணைய வழியாக பங்கேற்றனர்.
இந்த கூட்டத்தில் தமிழக நீர்வளத் துறை கூடுதல் செயலர் சந்தீப் சக்சேனா, ‘‘உச்ச நீதிமன்றத்தின் இறுதி உத்தரவுப்படி கர்நாடக அரசு தமிழகத்துக்கு வழங்கவேண்டிய காவிரி நீரை திறந்துவிடவில்லை. இதனால் தமிழக விவசாயிகள் முறையாக சாகுபடி செய்ய முடியாமல் தவிக்கின்றனர்.
ஜூன், ஜூலை ஆகிய மாதங்களில் வழங்க வேண்டிய நீரில் 37.9 டிஎம்சி இன்னும் வழங்கப்படவில்லை. நிலுவையில் உள்ள இந்த நீரை உடனடியாக திறக்க வேண்டும். கர்நாடக அரசு தினசரி எவ்வளவு நீரை திறக்க வேண்டும் எனஆணையம் உத்தரவிட வேண்டும்’’ என வலியுறுத்தினார்.