தந்தையை அழைத்துச் சென்ற சிறுமி

புவனேஸ்வர்: அக்டோபர் . 28 ஆம்புலன்ஸை அழைக்க செல்போன் இல்லாததால், தனது தந்தையை 3 சக்கர சைக்கிளில் 35 கிலோ மீட்டர் தூரம் அழைத்துச் சென்று மருத்துவமனையில் சேர்த்துள்ளார் 14 வயது சிறுமி.
ஒடிசா மாநிலம் பத்ரக் மாவட்டம், நாடிகன் கிராமத்தைச் சேர்ந்தவர் சம்புநாத். சுமையை ஏற்றிச் செல்லும் 3 சக்கர சைக்கிளை வைத்து பிழைப்பு நடத்தி வருகிறார். கடந்த 22-ம் தேதி இரு பிரிவினரிடையே ஏற்பட்ட சண்டையில் சம்புநாத் படுகாயமடைந்துள்ளார்.
இதையடுத்து, சம்புநாத்தை அவருடைய 3 சக்கர சைக்கிளில் வைத்து அருகில் (14 கி.மீ.) உள்ள மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றுள்ளார் அவருடைய 14 வயது மகள் சுஜாதா. அங்கு சம்புநாத்தை பரிசோதித்த மருத்துவர்கள், அவரை உடனடியாக பத்ரக் மாவட்ட தலைமை மருத்துவமனைக்கு அழைத்துச் சொல்லும்படி அறிவுறுத்தி உள்ளனர். இதையடுத்து அதே 3 சக்கர சைக்கிளில், மேலும் 35 கிலோ மீட்டர் தூரத்தில் உள்ள மாவட்ட மருத்துவமனையில் தந்தையை சேர்த்துள்ளார். அங்கு சம்புநாத்தை பரிசோதித்த மருத்துவர்கள், அவருக்கு அறுவை சிகிச்சை செய்ய வேண்டும் என்று கூறியுள்ளனர். ஆனால், இப்போதைக்கு அவரை வீட்டுக்கு அழைத்துச் செல்ல வேண்டும் என்றும் ஒரு வாரம் கழித்து மீண்டும் அழைத்து வர வேண்டும் என்றும் கூறியுள்ளனர்.
இதுகுறித்து சிறுமி சுஜாதா கூறும்போது, “செல்போன் இல்லாத காரணத்தால் ஆம்புலன்ஸை அழைக்க முடியவில்லை. அதேநேரம் தனியார் வாகனத்தில் அழைத்துச் செல்லவும் வசதி இல்லை. அதனால்தான் சைக்கிளில் தந்தையை அழைத்து வந்தேன். இப்போது ஒரு வாரம் கழித்து வருமாறு கூறுகிறார்கள். என்ன செய்வதென்று தெரியவில்லை” என்றார்.