
மண்டியா : ஜூன். 16 – பட்டப்பகலில் தனியாக இருந்த பெண்ணின் கழுத்தை அறுத்து கொடூரமாக கொலை செய்துள்ள சம்பவம் கே ஆர் பேட்டை தாலூகாவின் கிக்கேரி என்ற கிராமத்தில் நடந்துள்ளது. கிக்கேரியில் தனியாக இருந்த பெண் புஷ்பலதா (45) என்பவரின் வீட்டுக்குள் நுழைந்து கொடூரமாக கொலை செய்து விட்டு தப்பியோடியுள்ள குற்றவாளிகளை போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர். புஷ்பலதாவின் கணவன் பத்து வருடங்களுக்கு முன்பு இறந்ததுடன் அப்போதிலிருந்து புஷ்பலதா தனியாகவே வாழ்ந்து வந்துள்ளார். இவருடன் இவருடைய மகன் ஒருவன் இருந்துள்ளான்.பிழைப்பை நடத்த மருந்து கடை வைத்திருந்த புஷ்பலதா நேற்று மதியம் உணவுக்கென வீட்டுக்கு வந்த போது இந்த கொலை நடந்துள்ளது. தாய் எவ்வளவு நேரமாகியும் மருந்து கடைக்கு வராததால் மகன் வீட்டுக்கு சென்று பார்த்தபோது இந்த கொலை தெரிய வந்துள்ளது. கொலையாளிகள் புஷ்பலதாவின் தலை மற்றும் கழுத்து பகுதிகளில் கத்தியால் அறுத்து கொலை செய்துள்ளனர். தவிர புஷ்பலதாவின் ஆடைகள் அலங்கோலமாக இருந்ததால் அவரை பாலியல் பலாத்காரம் செய்து பின்னர் கொலை செய்திருப்பதாக சந்தேகம் எழுந்துள்ளது. புஷ்பலதாவின் கொலை பல சந்தேகங்களுக்கு இடம் அளித்துள்ளது. சம்பவ இடத்திற்கு கிக்கேரி போலீசார் வந்து மேற்பார்வையிட்டு குற்றவாளிகளை தேடுவதில் தீவிரமாயுள்ளனர்.