சென்னை ஆக. 16-:’தமிழகம் முழுதும் பல்வேறு தனியார் பள்ளிகள், சுதந்திர தின விழாவை ஒருநாள் முன்னதாகவே கொண்டாடிது சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.பள்ளிகளில் ஆண்டுதோறும் ஆக. 15ல் சுதந்திர தின விழா கொண்டாடப்படுவது வழக்கம். இந்தாண்டு ஆக. 15 வெள்ளிக்கிழமை என்பதால், சனி, ஞாயிறு என அடுத்தடுத்து தொடர் விடுமுறை நாளானது.இதனால், தமிழகம் முழுதும் பல்வேறு தனியார் பள்ளிகளில், ஒரு நாள் முன்னதாகவே, அதாவது ஆக. 14 வியாழக்கிழமையே சுதந்திர தின விழா கொண்டாடப்பட்டதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.தொடர் விடுமுறை, பள்ளி வாகனங்கள் ஒருநாள் இயக்குவதை தவிர்த்தல், மாணவ – மாணவியர், ஆசிரியர்கள் பள்ளிக்கு வராமல் விடுமுறை நாளை முழுமையாக பயன்படுத்தும் வாய்ப்பு உள்ளிட்டவை, ஒருநாள் முன்னதாக சுதந்திர தின விழா கொண்டாடப்பட்டதற்கான காரணங்களாக கூறப்படுகின்றன.ஆனால், இதற்கு சமூக ஆர்வலர்கள், தேசப்பற்றாளர்கள் மட்டுமின்றி, பெற்றோர், பொதுமக்கள் தரப்பில் இருந்தும் எதிர்ப்பு எழுந்துள்ளது.














