தனியார் வாகனங்கள் வேலை நிறுத்தம் பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை இல்லை

பெங்களூரு, செப். 7: பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி செப். 11 ஆம் தேதி தனியார் வணிக வாகனங்கள் வேலை நிறுத்தத்தில் ஈடுபட முடிவு செய்துள்ளன. இதனால் தனியார் வாகனங்களில் பள்ளி, கல்லூரி, பணிக்கு செல்பவர்கள் பாதிக்கப்படலாம் என கருத்தப்படுகிறது. வேலை நிறுத்தத்தின் போது பிஎம்டிசி, கேஎஸ்ஆர்டிசி பேருந்து சேவைகளில் எந்த இடையூறும் இருக்காது எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
வரும் திங்கட்கிழமை (செப். 11) தனியார் வணிக வாகனங்களின் உரிமையாளர்கள் நடத்தும் வேலை நிறுத்தத்திற்கு மத்தியில், பள்ளிகள் வழக்கமான செயல்பாடுகளை நடத்தும் என உறுதியளித்து, விடுமுறை எதுவும் அறிவிக்கப்படவில்லை என்று பள்ளி சங்கங்கள் தெளிவுபடுத்தியுள்ளன.
இது குறித்து க‌ர்நாடக ஆங்கில வழி பள்ளிகள் (கேஏஎம்எஸ்) நிர்வாகத்தின் இணைச் செயலாளர் டி.சஷி குமார் கூறியது, “தற்போது, ​​பள்ளி வாகன ஓட்டுநர்கள் போராட்டத்தில் பங்கேற்பது குறித்து எந்த விவாத‌மும் நடைபெறவில்லை. எங்கள் பள்ளி வாகனங்கள் ஓட்டுநர்கள் தங்கள் வழக்கமான அட்டவணையைப் பராமரிப்பார்கள். பள்ளி பேருந்து இயக்கங்களுக்கு இடையூறு ஏற்படாமல் பார்த்துக் கொள்வார்கள். இருப்பினும், தனியார் பள்ளிகள் சூழ்நிலையின் அடிப்படையில் முடிவுகளை எடுக்கும் என்றார்.
இதற்கிடையில், போக்குவரத்துத்துறை அதிகாரிகள், பிஎம்டிசி அல்லது கே.எஸ்.ஆர்.டி.சி பேருந்து சேவைகளுக்கு எந்த இடையூறும் இல்லை. ஏனெனில் தனியார் போக்குவரத்து அமைப்பு வேலைநிறுத்தத்திற்கு அழைப்பு விடுத்துள்ளது. இதனால் அரசு போக்குவரத்து சேவைகளுக்கு எந்த பாதிப்பும் இருக்காது என்று பொது மக்களுக்கு உறுதியளித்தனர். திங்கட்கிழமை வேலைநிறுத்தத்தின் போது டாக்சிகள் அல்லது ஆட்டோக்களை நம்பியிருப்பவர்கள் தங்கள் பணியிடங்கள் அல்லது இலக்குகளை அடைய, உரிய திட்டமிடுமாறு அறிவுறுத்தப்படுகின்றனர்.
கர்நாடக மாநில தனியார் போக்குவரத்து சங்க கூட்டமைப்பு தலைவர் நட்ராஜ் சர்மா கூறியதாவது: தங்களின் கோரிக்கைகளுக்கு தீர்வு காண மாநில அரசுக்கு ஆகஸ்ட் 30 வரை காலக்கெடு வழங்கப்பட்ட‌து. அரசு ஒருமித்த கருத்துக்கு வராததால், அனைத்து சங்கங்களின் கூட்டத்தைக் கூட்டி, செப். 11 அம் தேதி பெங்களூரில் வேலை நிறுத்தத்திற்கு அழைப்பு விடுக்க முடிவு செய்யப்பட்டது.
“பிரச்சினைகளை அரசுடன் பேசி தீர்த்துக்கொள்ள விரும்புகிறோம். ஆனால், போக்குவரத்து அமைச்சர் எங்களின் தொலைபேசி எண்ணைகளை முடக்கியுள்ளார். பலமுறை அழைத்தாலும், ஒரே ஒரு ரிங் மூலம் அழைப்புகள் துண்டிக்கப்படுகின்றன. அதனால், போராட்டத்தில் ஈடுபடுவதை தவிர எங்களுக்கு வேறு வழி எதுவும் இல்லை என்றார்.
ஆட்டோக்கள், விமான நிலைய டாக்சிகள், மேக்சி கேப்கள், கார்ப்பரேட் வாகனங்கள் மற்றும் பேருந்துகள் உட்பட சுமார் ஒன்பது லட்சம் தனியார் வணிக வாகனங்கள் செப்டம்பர் 11 தேதிய‌ன்று 32 கூட்டமைப்புகள் போராட்டத்தில் ஈடுபடும். தனியார் போக்குவரத்து சங்கங்கள் மாநகரம் முழுவதும் வேலை நிறுத்தத்திற்கு அழைப்பு விடுத்துள்ளன.
அன்றைய தினம் பெங்களூருவில் நடைபெறும் கண்டனப் பேரணியில் கலந்துகொள்ள மற்ற மாவட்டங்களைச் சேர்ந்த ஓட்டுனர்களிடம் கூட்டமைப்பு ஆதரவு கோரியுள்ளது. 30 கோரிக்கைகள் அடங்கிய தொகுப்பை கர்நாடக போக்குவரத்து அமைச்சரிடம் சமர்ப்பித்ததாகவும், அவற்றில் 28 கோரிக்கைகளுக்கு ஆகஸ்ட் 30 ஆம் தேதிக்குள் தீர்வு காணப்படும் என்றும் உறுதியளித்ததாகவும் சர்மா தெரிவித்தார்.
முதலில் போராட்டம் ஜூலை 27 ஆம் தேதி திட்டமிடப்பட்டிருந்த போதிலும், அரசின் உறுதிமொழிகள் நிறைவேற்றப்படாததன் அடிப்படையில் ஒத்திவைக்கப்பட்டதாக கூட்டமைப்பு வலியுறுத்தியுள்ளது. கர்நாடகாவில் ஐந்து லட்சத்துக்கும் அதிகமான ஆட்டோக்கள், மூன்று லட்சம் டாக்சிகள் மற்றும் 55,000க்கும் மேற்பட்ட தனியார் பேருந்துகள் உள்ளன. இது கிட்டத்தட்ட 20 லட்சம் தனிநபர்களுக்கு நேரடி வேலைவாய்ப்பையும், 50 லட்சத்துக்கும் மேற்பட்ட குடிமக்களுக்கு மறைமுக வேலைவாய்ப்பையும் வழங்குகிறது என்பதையும் கூட்டமைப்பு எடுத்துக்காட்டுகிறது.