தபால் மூலம் வாக்களித்த போலீசார்

சென்னை: ஏப்ரல். 11 – மக்களவைத் தேர்தலையோட்டி இன்று முதல் ஏப்.13 மாலை 5 மணி வரை காவலர்கள் தபால் வாக்கு செலுத்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. காவலர்கள் தபால் வாக்களிக்க ஏப்.13-வரை சிறப்பு வாக்குச்சாவடி மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன.இது தொடர்பாக சென்னை மாநகராட்சி வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது: சென்னை மாநகர காவல் துறையில் பணியாற்றுபவர்களில் தபால் வாக்கு கேட்டு விண்ணப்பித்த காவல் அதிகாரிகள் அனைவரும் இன்று முதல் 13-ம்தேதி வரை காலை 9 முதல் மாலை 5 மணி வரை தபால் வாக்குகளை செலுத்த சென்னை மாவட்டத்துக்கு உட்பட்ட 3 தேர்தல் நடத்தும் அலுவலர்களின் அலுவலகத்தில் சிறப்பு தபால் வாக்குச்சாவடி அமைக்கப்பட்டுள்ளது.
அதன்படி சென்னை பேசின் பாலம் சாலை, மூலகொத்தளம் பகுதியில் அமைந்துள்ள மாநகராட்சியின் வட சென்னை வட்டார துணை ஆணையர் அலுவலகத்தில் அமைக்கப்பட்டுள்ள சிறப்பு தபால் வாக்குச்சாவடி மையத்தில் வடசென்னை, கிருஷ்ணகிரி, தருமபுரி, திருவண்ணாமலை, ஆரணி, விழுப்புரம், கள்ளக்குறிச்சி, சேலம், நாமக்கல், ஈரோடு, திருப்பூர், பெரம்பலூர் ஆகிய மக்களவை தொகுதிகளை சேர்ந்தவர்கள் தபால் வாக்குகளை செலுத்தலாம்.