தபால் வாக்கு பெறும் பணி

சென்னை: ஏப். 5 : தமிழகத்தில் ஏற்கெனவே 12-டிபடிவத்தை பூர்த்தி செய்து சமர்ப்பித்த 85 வயதுக்கு மேற்பட்ட மூத்தகுடிமக்கள், மாற்றுத் திறனாளிகளிடம் வீடு வீடாக சென்று தபால்வாக்கு பெறும் பணி தொடங்கியுள்ளது.தமிழகத்தின் 39 தொகுதிகளிலும் ஏப்ரல் 19-ம் தேதி மக்களவைதேர்தல் வாக்குப்பதிவு ஒரே கட்டமாக நடைபெறுகிறது. இதற்கான முன்னேற்பாடுகளை தேர்தல் ஆணையம் மேற்கொண்டு வருகிறது.
தேர்தல் பணிகளில் ஈடுபடஉள்ள அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள், காவல் துறையினருக்கு அவர்கள் பயிற்சி பெறும் மையங்களிலேயே தபால் வாக்கு செலுத்த வசதி செய்யப்பட்டுள்ளது. அவர்கள் பணியாற்றும் வாக்குச்சாவடியில் இடிசி எனப்படும் மின்னணு வாக்கு செலுத்தும் வசதியும் வழங்கப்படுகிறது.இதுதவிர, வாக்குச்சாவடிக்கு நேரில் வந்து வாக்களிக்க இயலாத 85 வயதுக்கு மேற்பட்ட மூத்த குடிமக்கள், மாற்றுத் திறனாளிகள், அத்தியாவசிய பணியில் ஈடுபடும் செய்தியாளர்கள் உள்ளிட்டோருக்கும் தபால் வாக்கு வசதி வழங்கப்பட்டுள்ளது.
இவ்வாறு தபால் வாக்கு செலுத்த விருப்பம் உள்ளவர்களுக்கு வாக்குச்சாவடி நிலை அலுவலர்கள் கடந்த மாதம் 25-ம்தேதி வரை ‘12-டி’ படிவத்தை வீடு வீடாக வழங்கினர். பின்னர், அந்த படிவங்கள் பூர்த்தி செய்து பெறப்பட்டன.அதன்படி, தமிழகத்தில் உள்ள 6.08 லட்சம் மூத்த குடிமக்களில் விருப்ப அடிப்படையில் 4.30 லட்சம்பேருக்கு 12-டி படிவம் வழங்கப்பட்டது. அதில் 77,445 பேர் படிவத்தை பூர்த்தி செய்து அளித்தனர். அதேபோல, 4.51 லட்சம் மாற்றுத் திறனாளிகளில் 3.65 லட்சம் பேருக்கு படிவம் வழங்கப்பட்டது. இதில் 50,676 பேர் படிவத்தை பூர்த்தி செய்து அளித்தனர். இதுதவிர, 16 செய்தியாளர்களும் 12-டி படிவத்தை பூர்த்தி செய்து தந்துள்ளனர். பெறப்பட்ட படிவங்களை தேர்தல் நடத்தும் அலுவலர்ஆய்வு செய்து, தகுதியானவர்களுக்கு தபால் வாக்கு அளிக்க அனுமதியளித்தார்.