தமிழகத்தின் அமைதியைகெடுக்க சதி – முதல்வர் குற்றச்சாட்டு

சென்னை,அக்.3-
சென்னை தலைமைச் செயலகத்தில் உள்ள நாமக்கல் கவிஞர் மாளிகையில் முதல்- அமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் மாவட்ட கலெக்டர்கள், எஸ்.பி.க்கள், மற்றும் உயர் அதிகாரிகள் உடனான 2 நாள் ஆலோசனை மாநாடு தொடங்கி நடைபெற்று வருகிறது.
மாநாட்டில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் பேசியதாவது:-
பொதுமக்கள் கூடும் இடங்களில் அமைதியை ஏற்படுத்திக் காட்டுவது நமது முதல் இலக்கு. அமைதியான தமிழ்நாட்டில் குழப்பம் ஏற்படுத்த நினைப்பவர்களுக்கு இடமளிக்கக்கூடாது. கள்ளச்சாராயம், போதை பொருட்களை அறவே ஒழிக்க வேண்டும். இரும்புக்கரம் கொண்டு அடக்க வேண்டும்.
பொய்ச்செய்திகள் பரப்புவோர் மீது
கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும். அரசின் திட்டங்கள் கடைகோடி மனிதரையும் சென்றடைய வேண்டும்.
நாடாளுமன்ற தேர்தல் நடைபெற இருப்பதால் உள்நோக்கத்தோடு சிலர் அமைதியை கெடுக்க செயல்படுவர்; அதனை தீவிரமாக கண்காணித்து தடுக்க வேண்டும். சாலை விபத்துகளால் அதிக மரணம் ஏற்படும் மாநிலங்களில் ஒன்றாக தமிழ்நாடு இருப்பது வேதனையளிக்கிறது. இந்த நிலையை மாற்ற காவல்துறை, நெடுஞ்சாலைத்துறை, போக்குவரத்துத்துறை ஒருங்கிணைந்து விபத்துகளை குறைப்பது தொடர்பாக ஆய்வு செய்ய வேண்டும்.
சென்னை உள்ளிட்ட இடங்களில் போக்குவரத்து நெரிசலை குறைக்க சிறப்பு திட்டம் ஏற்படுத்த வேண்டும். பெண்கள், குழந்தைகளுக்கு எதிரான குற்றங்களில் நடவடிக்கை எடுப்பதில் சமரசம் இருக்கக் கூடாது. குற்றவாளிகளுக்கு உடனடியாக தண்டனை பெற்று தர வேண்டும் இன்று முதல்வர் மு க ஸ்டாலின் உத்தரவிட்டார்.